×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழாய் பதிப்பு உள்ளிட்ட புதிய பணிகளுக்கு தடை: n நீர் அகற்றும் பணிக்கு கூடுதல் லாரிகள் n சென்னை குடிநீர் வாரியம் முடிவு

சென்னை, செப்.17: பருமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை காலம் முடியும் வரை சென்னை குடிநீர் வாரிய பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் மழைநீரை உடனுக்குடன் அகற்றும் பணிக்காக கூடுலாக லாரிகளை வாடகைக்கு எடுக்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாகவே, அக்டோபர் மாதத்தில் தொடங்கும் இந்த பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்யும். கடந்த சில ஆண்டுகளாக, வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்தது. அதை கருத்தில் கொண்டு, சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரப்படுத்தியுள்ளது.

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அவை உடனடியாக வடியும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆண்டாண்டு காலமாக மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதேபோல், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், இந்த காலகட்டங்களில் உருவாகும் புயல்கள், வெள்ள பாதிப்புகள் உள்ளிட்ட பேரிடர்களால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, அதற்கான பணிகளை சென்னை மாநகராட்சியும், சென்னை குடிநீர் வாரியமும் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. குறிப்பாக தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலை பணிகளை வேகமாக நடத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, இப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு பள்ளம் காணப்படுகிறது. இப்பணிகள் முடிவடைந்த பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அவற்றை சீரமைக்கும் பணிகளையும் சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டால் அடுத்த 3 மாதங்கள் மழைகாலமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த ஆண்டு மழை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, மழையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், மழைநீரை அகற்றுவது, சாய்ந்து விழும் மரங்களை அகற்றுவது, கழிவுநீர் அடைப்புகளை சீர் செய்வது போன்ற பணிகளை துரிதமாக செய்யும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும், கழிவுநீர் செல்லும் கால்வாயில் உள்ள இயந்திர நுழைவாயில்கள் பல உடைந்தும், கழிவுகளால் அடைக்கப்பட்டும் காணப்படுகிறது. அவற்றை சீர் செய்தும், அவற்றில் உள்ள கசடுகளை அகற்றவும் தூர்வாரும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனுக்குடன் இந்த இயந்திரங்களை கொண்டு செல்லவும், மழைநீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தவும் சென்னை குடிநீர் வாரியத்திடம் தற்போதுள்ள 537 லாரிகள் போதுமானதாக இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, அதிகாரிகள் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 50 லாரிகளை ₹1.43 கோடி செலவில் வாடகைக்கு எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த லாரிகளை திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து வாடகைக்கு வாங்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த லாரிகள் மண் அகற்றும் இயந்திரங்கள், ஜெட்ராடர்கள், சூப்பர் சக்கர்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் இணைப்புகளை ஏற்படுத்துவது, பழுதடைந்து குடிநீர் வெளியேறி வரும் பிரதான குழாய்களை சரி செய்வது, மேலும் புதிய குழாய்களுடன் இணப்பது, கழிவுநீர் அகற்றுவதற்கான கால்வாய்களை கட்டுவது போன்ற பணிகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் நடைபெறும் பகுதிகளில் ராட்சத பள்ளங்கள் தோண்டப்படுகிறது.

இதுபோன்ற பணிகளை உடனே சரி செய்ய முடியாது. பல நாட்கள் வேலை நடைபெறும். இந்த சூழ்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. எனவே, இந்த ராட்சத பள்ளங்கள் மற்றும் குடிநீர் வாரிய பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் போன்றவற்றால் மழை காலத்தில் நடந்து செல்வோருக்கும், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும். இரவு நேரங்களில் சிலர் இந்த பள்ளங்களில் விழுந்து விபத்துகளை சந்திக்க கூடும். எனவே, பொதுமக்களின் இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தற்போது நடைபெற்று வரும் பணிகளை போர்கால அடிப்படையில் நடத்தி ஒரு வாரத்துக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதோடு, வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டால், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மழை காலம் முடியும் வரை இதுபோன்று பெரிய அளவிலான பள்ளம் தோண்டும் பணிகள் உள்ளிட்ட புதிய குடிநீர் வாரிய பணிகளை தற்காலிகமாக நிறுத்தவும் சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை குடிநீர் வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது. ஏனென்றால், மழை காலத்தில் குடிநீர் வாரியத்தின் பணி முக்கியமானது. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மழைநீர் அகற்றும் பணிக்கு என்னென்ன தேவை உள்ளதோ அவற்றை நிறைவு செய்வது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாகத் தான் கூடுதலாக லாரிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும், ₹15 கோடி முதல் ₹17 கோடி வரையில் அதிக குதிரைத்திறன் கொண்ட 50 பம்புகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம். வெள்ளத்தை எதிர் கொள்வதில் சென்னை மாநகராட்சிக்கு உதவியாக சென்னை குடிநீர் வாரியம் செயல்படும். கழிவுநீர் தடுப்பு பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட உத்தரவிட்டுள்ளோம். குறிப்பாக, சென்னை குடிநீர் வாரிய பணிகள் அனைத்தும் சாலைகளுக்கு அடியில் தான் நடக்கிறது. இதற்காக பள்ளம் தோண்ட வேண்டியதிருப்பதால், மழைநீர் தேங்கும் போது எதிர்பாராத விபத்துகள் நேரிடுவது கடந்த கால அனுவங்களாக இருக்கிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், விபத்துகளை தவிர்க்கும் வகையில் மழை காலம் முடியும் வரை புதிய பணிகளை தொடர வேண்டாம் என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

537 இயந்திரங்கள்
மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை குடிநீர் வாரியத்திடம், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 142 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 35 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் 60 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 537 கழிவுநீர் இயந்திரங்கள் உள்ளன. மழை காலங்களில் இவற்றின் தேவை அதிகமாகவே இருக்கும். இந்த இயந்திரங்களை முழு அளவில் பயன்படுத்தினால் தான் மழை பாதிப்புகளில் இருந்து மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.

24 மணி நேர சேவை
மழை காலத்தை பொறுத்தவரை, கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அதிக அளவு மழை பெய்யும் போது, வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக அடைப்புகள் ஏற்படும். எனவே கழிவு நீரேற்று நிலையங்கள், மழை நீர் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதற்காக 24 மணி நேரமும் இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யபபட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப் பட்டாலும் டீசல் ஜெனரேட்டர்கள், தண்ணீர் மற்றும் கழிவுநீரை அகற்றுவதற்காக பம்பிங் நிலையங்களை இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்படும்.

பேரிடர் மீட்பு ஒத்திகை
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், இந்த காலகட்டங்களில் உருவாகும் புயல்கள், வெள்ள பாதிப்புகள் உள்ளிட்ட பேரிடர்களால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம், தீயணைப்பு மீட்பு படை இணைந்து பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழாய் பதிப்பு உள்ளிட்ட புதிய பணிகளுக்கு தடை: n நீர் அகற்றும் பணிக்கு கூடுதல் லாரிகள் n சென்னை குடிநீர் வாரியம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking Water Board ,Chennai ,Chennai Water Board ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சிப் பகுதிகள்...