×

மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு: மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், காவல்துறையினர் திடீர் ஆய்வு

திருவள்ளூர், செப். 17: விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக்கூடிய இடங்களில் இந்த ஆண்டும் திருவள்ளூர் 63, திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஸ் கல்யாண் ஆகியோர் உத்தரவின் பேரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் திருவள்ளூர் – ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது விநாயகர் சிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மற்றும் ரசாயனப் பொருள்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.

சிலை வைப்பவர்களுக்கு அறிவுரை
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளைப் பயன்படுத்த வேண்டாம். சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள். சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயனப் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த வேண்டாம்.

சிலைகளின் மேல்பூச்சு, அலங்காரத்திற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள். அதேநேரத்தில் மக்கும் தன்மையற்ற ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டாம். சுற்றுசூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜைக்கு பயன்படுத்தவும். மீண்டும் உபயோகிக்க கூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும். வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட மற்றும் ஒருமுறையே உபயோகித்து தூக்கியெறிய கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

பிரசாத விநியோகத்திற்கு மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பண்டிகையின் போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழல்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலுக்கு உகந்த விளக்குகளை பயன்படுத்த வேண்டும். ஃபிலமென்ட் பல்புகளை அலங்கார விளக்குகளாக பயன்படுத்த வேண்டாம். அலங்கார பொருட்களை பயன்படுத்தி தூக்கி எறியாமல் முடிந்த அளவு சேமித்து மீண்டும் பயன்படுத்தவும். ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு: மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், காவல்துறையினர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Thiruvallur ,Ganesha Chaturthi ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...