×

யாசகமல்ல.. உரிமை

தமிழ் நிலத்தின் உணவுக்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு உயிரோட்டமாக இருப்பது காவிரி நீர். குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி, ஒகேனக்கல்லில் பொங்கி பிரவாகம் எடுக்கிறது. அங்கிருந்து மேட்டூர் அணையில் சங்கமிக்கிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது பாசனப்பகுதிகளை ஆரத்தழுவி பசுமைக்கு வழி வகுக்கிறது. ஆனால் பாசனத்திற்கான நீரை கர்நாடக அணைகளில் இருந்து உரிய நேரத்தில் திறந்து விடுவதில் அம்மாநில அரசு தொடர்ந்து முரண்பட்டு நிற்கிறது.

அதேநேரத்தில் ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட தமிழ்நாடு, பல ஆண்டு கால சட்டப்போராட்டத்துக்கு பிறகு காவிரியில் தனக்கான உரிமையை நிலைநாட்டியது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். இந்த நீரை மாதம்தோறும் முறையாக வழங்க வேண்டும். ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதம் 45.95 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36.76 டிஎம்சி, அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி, நவம்பர் மாதம் 13.78 டிஎம்சி, டிசம்பர் மாதம் 7.35 டிஎம்சி, பிப்ரவரி முதல் மே மாதம்வரை 2.50 டிஎம்சி என்று நீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதனை முறையாக கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கப்பட்டது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இதை முறையாக பின்பற்றாத கர்நாடகம், பெருமழைக்காலங்களில் அங்குள்ள அணைகள் நிரம்பி வழியும்போது நீரை திறந்துவிடுகிறது. இப்படி மழைநீர் வடிகாலாக மட்டுமே நமது நிலத்தை பயன்படுத்தும் கர்நாடகம், அதையே ஆணையத்திற்கும் கணக்கு காட்டி, உரிய நீரை வழங்கி விட்டதாக பசப்புகிறது. இயற்கை அன்னை அருட்கொடையாய் நீரை வார்க்கும் காலங்களில் இங்குள்ள விவசாயிகளுக்கு கவலை இல்லை. ஆனால், பருவமழை பொய்க்கும் காலங்களில் உரியநேரத்தில் கர்நாடகம் நீரை வழங்காவிட்டால் லட்சக்கணக்கான ஏக்கர் சாகுபடி வீணாகிறது. நடப்பாண்டில் இதுபோன்றதொரு இக்கட்டான நிலை, இப்போது டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் துயரம் போக்க துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. எங்களுக்கே நீர் பற்றாக்குறையாக உள்ளது என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது கர்நாடகம். இந்தச்சூழலில் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் ஒன்றிய அமைச்சரிடம் மனு அளிப்பார்கள் என்று அறிவித்துள்ளார் நமது முதல்வர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் 16.2.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பற்றாக்குறை ஆண்டில் தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க வேண்டியதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி நடப்பாண்டில் 14.9.2023வரை 103.5டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும். ஆனால், 38.4 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கோடிட்டு காட்டியுள்ளார். காவிரிக்கும், தமிழ்நிலத்திற்கும் உள்ள பந்தம் தொப்புள்கொடி உறவை போன்றது. ஆயினும் சட்டத்தின் வழிநின்று நீர்கேட்கிறது தமிழ்நாடு. கண்ணியமான இந்த போக்கை கர்நாடகம் மதிக்க வேண்டும். காவிரி நீரை வழங்குவது யாசகமாக அல்ல. தமிழ்நாட்டிற்கான உரிமை என்பதை முரண்டு பிடிக்கும் கர்நாடகம் முதலில் உணரவேண்டியது மிகவும் அவசியம்.

The post யாசகமல்ல.. உரிமை appeared first on Dinakaran.

Tags : Yasakamalla ,Caviri ,Kuthakumalai, ,Ogenakal ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றில் குளித்த 17 வயது...