×

5 கொலை உள்பட 24 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டு கொலை: தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை; அரிவாளால் வெட்டியதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 கொலை உள்பட 24 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் பிடிக்க முயன்றபோது அரிவாளால் வெட்டியதால், என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார். ரவுடி வெட்டியதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலைகளில் பொதுமக்கள் முன்பு கொலைகளை செய்கிறவர்கள், கூலிப்படையாக செயல்படுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் ரவுடி கும்பல்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, தொழில் அதிபர்களை மிரட்டுவது, ரவுடிகளுக்குள் யார் பெரியவர் என்ற போட்டியில் ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் மீது மற்ற கோஷ்டியினர் தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக தாம்பரம் அருகே உள்ள பகுதிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழில் போட்டி, முன்விரோதம் மற்றும் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலால் தொடர்ந்து கொலைகள் நடந்து வந்தன.

இதனையடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், ரவுடிகளை வேட்டையாடுவது குறித்தும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் தலைமையில் கடந்த 6ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ரவுடிகளை ஏபிளஸ் உள்பட 4 வகையாக பட்டியலை தயாரித்து, அவர்களை கண்காணித்து வேட்டையாட 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடந்த 10 நாட்களாக ரவுடிகளை கண்காணித்து வந்தனர். தனிப்படை போலீசார் தேடுவது தெரிந்ததும், ரவுடிகள் தலைமறைவாகி விட்டனர்.

தலைமறைவான ரவுடிகள் வார இறுதியில் சென்னையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட ரகசியமாக கூடுவதாகவும் மற்ற நாட்களில் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குச் சென்று பதுங்குவதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வார இறுதி நாட்களில் ரவுடிகளை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஏ பிளஸ் ரவுடியான குள்ளா விஷ்வா அரசியல் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இவர் பாஜ இளைஞர் அணி முன்னாள் நிர்வாகியாக இருந்தவர்.

இதனால் ஏடிஜிபி அருண், டிஐஜி பொன்னி ஆகியோரது மேற்பார்வையில் போலீஸ் தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்த குள்ளா விஷ்வா என்ற விஸ்வநாதன் (38) என்ற ரவுடி திருவள்ளூர் மாவட்டம், பன்னூர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருப்பந்தியூர் கிராமம், ஐடியல் பார்ம் லேண்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவன் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 24 வழக்குகள் உள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் ஊராட்சி திமுக செயலாளராக இருந்த ரமேஷை அவரது அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொன்றார். 2016ல் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவரும், பாஜ நிர்வாகியுமான மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசனை சுங்குவார்சத்திரம் பஜாரில் வெட்டிக்கொன்றார். அதேபோல, அதிமுக இளைஞரணி நிர்வாகி நாகராஜ் என்பவரை 3 மாதத்துக்கு முன்பு வெட்டிப் படுகொலை செய்த வழக்கு உள்பட 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து சுங்குவார்சத்திரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர், எஸ்.ஐ.முரளி தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அப்போது போலீசாரை அரிவாளால் விஷ்வா சரமாரியாக வெட்டியுள்ளான். விஷ்வா வெட்டியதில் வாசு, ராஜேஷ் என்ற 2 போலீசார் படுகாயமடைந்தனர். இதனால் தற்காப்பிற்காக எஸ்.ஐ. முரளி, 4 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 குண்டுகள் விஷ்வாவின் மார்பினை துளைத்தது. இதில் சம்பவ இடத்திலேயே விஷ்வா இறந்தான். காயமடைந்த போலீசார் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், டிஐஜி பொன்னி, எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் காயமடைந்த போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக் கொண்டனர். புறநகரை கலக்கி வந்த ரவுடி என்கவுன்டர் சம்பவம் பெரும்புதூர் பகுதியில் உள்ள ரவுடிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீஸ் அதிகாரிகளை உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் பாராட்டினர்.

* பீதியில் ரவுடிகள்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரவுடிகளை போலீசார் வேட்டையாட தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் பேச தொடங்கியுள்ளனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சுற்றித் திரியும் பிரபல ரவுடிகள் பீதி அடைந்துள்ளனர். ஏ பிளஸ் ரவுடிகள் மற்றும் குள்ளா விஷ்வாவின் கூட்டாளிகள் தலைமறைவாக உள்ளனர்.

* ரவுடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை: ஏடிஜிபி அருண் பேட்டி
காயமடைந்த போலீசாரைப் பார்த்து ஆறுதல் கூறிய பிறகு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், நிருபர்களிடம் கூறும்போது, ‘‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரக்கடம், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் நிறைய இருக்கின்றன. இதில் தொழில் போட்டி காரணமாக ரவுடிகள் பெருகி வருகின்றனர். இவர்களை ஒடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, என்ன காரணத்தால் இவர்கள் இச்செயலில் ஈடுபடுகிறார்கள், இவர்களை ஒடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசித்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ் ,வாசு ஆகிய இரு தலைமை காவலர்களையும் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்ததுடன் ஆறுதலும் கூறினேன்’’ என்றார். பேட்டியின் போது காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி, எஸ்.பி.சுதாகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post 5 கொலை உள்பட 24 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டு கொலை: தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை; அரிவாளால் வெட்டியதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Roudi ,Chennai ,Sripuluthur ,Roudi Encounterter ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...