×

பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க தயங்குவதேன்? அண்ணா பல்கலை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

உதவிப் பேராசிரியர்களுக்கான பணியை செய்து வரும் தற்காலிக ஆசிரியர்கள், பணி வரன்முறை செய்யக் கோரியும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞர் எம்.சினேகா, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அவினாஸ் வாத்வானி ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிர்வாக காரணங்களுக்காக தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. நிர்வாக காரணம் என்ற ஒரே காரணத்துக்காக 10-12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகிறார்கள். நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் இந்த கல்வி நிறுவனங்களை செயல்பட அனுமதிக்க முடியாது.

இந்த வழக்கில் முடிவெடுக்குமுன், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் நிர்வாகம் தற்போது யாரிடம் உள்ளது? நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன? 12லிருந்து 15 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய பல்கலைக்கழகத்துக்கு என்ன சிக்கல் உள்ளது. தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவதேன்? பல்கலைகழகத்தை மேலும் வலுப்படுத்த நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஏன் நேரடி தேர்வு நடத்த முடியாது என்று இந்த நீதிமன்றத்திற்கு தெரிய வேண்டும். இந்த கேள்விகளுக்கு செப்டம்பர் 26ம் தேதிக்குள் பதிலளித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க தயங்குவதேன்? அண்ணா பல்கலை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anna University ,iCort ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு...