×

திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் வேலூர் பயணம்: சென்னை சென்ட்ரலில் தொண்டர்கள் வழியனுப்பினர்

சென்னை: திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் மூலம் நேற்று மாலை வேலூர் புறப்பட்டு சென்றார். தொண்டர்கள் திரளாக வந்து அவரை வழியனுப்பி வைத்தனர். செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். அதே செப்டம்பர் 17ம் தேதி 1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கொண்டாடுவது வழக்கம். அதே சமயம் கலைஞரின் நூற்றாண்டு விழாவும் தொடங்கி நடைபெறுவதால் இந்தாண்டு முப்பெரும் விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்த வகையில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (17ம் தேதி) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, இந்த ஆண்டுக்கான பெரியார் விருது மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க.சுந்தரத்திற்கும், கலைஞர் விருது அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருது தென்காசி மல்லிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருது பெங்களூர் ந.இராமசாமி ஆகியோருக்கு வழங்குகிறார்.

இந்த விழாவில் பங்கேற்க நேற்று மாலை 5.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வேலூருக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றார். இரவு 8.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனியார் விடுதிக்கு சென்று இரவு ஓய்வெடுத்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு தனியார் விடுதியில் இருந்து புறபட்டுச் சென்று வேலூர் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து மேல்மணவூர் அகதிகள் முகாம்களுக்கு சென்று புதிய குடியிருப்புகளை திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மதியம் மீண்டும் விடுதிக்கு திரும்பி வந்து ஓய்வெடுக்கிறார்.

பிறகு மாலை 4.30 மணியளவில் விடுதியில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார். அதன்பிறகு இன்று இரவு 8.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் சென்று, கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து ரயில் மூலம் காட்பாடி சென்றதையொட்டி அமைச்சர்கள், மேயர், திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கூடி அவரை வழியனுப்பி வைத்தனர். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அதே ரயிலில் காட்பாடி சென்றார்.

The post திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் வேலூர் பயணம்: சென்னை சென்ட்ரலில் தொண்டர்கள் வழியனுப்பினர் appeared first on Dinakaran.

Tags : CM ,Kazhagam ,G.K. Stalin ,Vellore ,Chennai Central ,Chennai ,Chief President of the CM ,Thirty Festival ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...