×

டெங்கு காய்ச்சல் அச்சம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் டெங்கு பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் பருவமழைக்கு முன்னால் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போன்ற மாதங்களில் அதிகரிப்பது இயல்பு. தமிழகத்தில் கடந்த ஓராண்டாக டெங்கு பாதிப்பு அதிகளவில் இல்லை. இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4048. இதுவரை 3 உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கிறது. இந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடக்கத்திலேயே இந்த பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. சுகாதாரத்துறை செயலாளரால் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கடிதங்கள் வாயிலாக உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் தேவையற்ற இடங்களில் தேங்கி நிற்கின்ற நன்னீரில் உருவாகின்ற ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவால் பெரிய அளவிலான அச்சம் கொள்ளும் நிலை இல்லை. எனவே டெங்கு குறித்து பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post டெங்கு காய்ச்சல் அச்சம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Tamil Nadu ,
× RELATED அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக...