
கடலூர்,: கடலூர் தென்பெண்ணையாற்றில் இறால் பிடிக்கும் போது துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு செல்கிறது. நேற்று இங்கு சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் சிலர் கைகளால் இறால் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் சில துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் அந்த துப்பாக்கி தோட்டாக்களை ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் கொடுத்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தோட்டாக்கள் கிடைத்த இடத்தில் சோதனை செய்தபோது மேலும் ஏராளமான தோட்டாக்கள் கிடைத்துள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தோட்டாக்கள் முழுவதையும் கைப்பற்றி அதை எஸ்பி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து எஸ்.பி ராஜாராமிடம் கேட்டபோது, தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த தோட்டாக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த தோட்டாக்களில் ஏராளமான மண் படிந்திருப்பதால் அவற்றை முழுமையாக பரிசோதிக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் பிறகு தான் அந்த தோட்டாக்கள் எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும். இந்த தோட்டாக்கள் அனைத்தும் ஏர் பிஸ்டல், ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்தது இவை அனைத்தும் இதுவரை பயன்படுத்தாத தோட்டாக்களாக உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் துப்பாக்கி தோட்டாக்கள் ண கிடைத்த இடத்தில் மீண்டும் சோதனை செய்யும் பணி நடைபெறும் என்று கூறினார்.இதே போல கடந்த மாதம் தென்பெண்ணை ஆற்றில் மீனவர் வீசிய வலையில் ஏர் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post கடலூர் தென்பெண்ணையாற்றில் இறால் பிடிக்கும் போது துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கியதால் பரபரப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.