×

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்குவதால் டெல்லியில் நாளை அனைத்து கட்சி கூட்டம்: 5 மாநில தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு முன் அரசியல் பரபரப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. 5 மாநில தேர்தல், லோக்சபா தேர்தல் முன்பாக நடக்கும் இந்த கூட்டத் தொடரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் மத்திய பிரதேசம், சட்டீகர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் ெதாடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

அடுத்தாண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை மறுநாள் (செப். 18) முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. அடுத்த நாள் (செப். 19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படாததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே நாளை (செப். 17) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற செய்தி இதழில் இந்த சிறப்பு கூட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாளில், அரசியல் சாசன நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடைபெறும். குறிப்பாக, நாடாளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள், படிப்பினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்’ என்று கூறப்பட்டது.

இதுதவிர, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிநிபந்தனைகள், பதவிக் காலம்)மசோதா இந்த கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அந்த செய்தி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனால், அதுபற்றி இந்த சிறப்பு கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளதால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கட்டாயம் சிறப்பு கூட்டத் தொடரில் பங்கேற்குமாறு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்குவதால் டெல்லியில் நாளை அனைத்து கட்சி கூட்டம்: 5 மாநில தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு முன் அரசியல் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Parliament ,Lok Sabha ,New Delhi ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...