×

கோவையில் கார் வெடித்த வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 30 இடங்களில் என்ஐஏ சோதனை: செல்போன், லேப்டாப், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: கோவையில் கார் வெடித்த வழக்கு தொடர்பாக சென்னையில் திருவிக நகர், நீலாங்கரை மற்றும் கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் செல்போன், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் காரில் சிலிண்டர் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் (28) என்பவர் பலியானார். போலீசார் சோதனை செய்ததில் காரில் இருந்து பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் நடத்திய விசாரணையில், கோவையில் சில இடங்களை குண்டு வைத்து தகர்க்க சதி நடைபெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சதித்திட்டம் தீட்டியதாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜமேசா முபின் வீட்டில் சோதனை செய்ததில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது தவ்பிக், பெரோஸ்கான், உமர் பாரூக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி என மேலும் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கைதானவர்களை என்ஐஏ அதிகாரிகள் அவ்வப்போது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். அதில், கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் குனியமுத்தூரில் உள்ள அரபிக்கல்லூரியில் படித்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கல்லூரியில் படித்தவர்கள், அதில் தொடர்புடையவர்களின் வீடுகளின் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் 22 குழுக்களாக பிரிந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவையில் 23 இடங்களில் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் ஜிஎம் நகரில் உள்ள அபுதாஹீர், குனியமுத்தூர் செம்மொழி நகரை சேர்ந்த சோகைல், கரும்புக்கடையை சேர்ந்த மன்சூர், உக்கடம் பிலால் எஸ்டேட்டில் தமிம்முன் வீடு மற்றும் 82வது வார்டு பெண் கவுன்சிலர் முபசீராவின் கோட்டை மேடு ராமசாமி தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இவரது கணவர் ஆரிப் அரபிக் கல்லூரியில் படித்துள்ளதால் இவரது வீட்டிலும் சோதனை நடந்தது. மேலும் கிணத்துக்கடவு, ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் சிலரது வீடுகள் என கோவையில் மொத்தம் 23 பேர் வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் இருப்பவர்களின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? அதற்கான ஆவணங்கள் வீட்டில் உள்ளதா? அரபிக்கல்லூரியில் படித்தவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? உள்ளிட்ட கோணங்களில் சோதனை நடத்தப்பட்டு விசாரணை நடக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை அயனாவரம் மைலப்பா தெருவில் உள்ள முகமது ஜர்காரியா என்பவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இதே போல திருவிக நகர் கென்னடி ஸ்கொயர் காமராஜர் தெருவில் உள்ள ரகுமான் (எ) முஜ்பீர் ரகுமான் (27) என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரகுமான், துணிக்கடை வியாபாரம் செய்து வருகிறார். 2 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் அயனாவரம் போலீசார் மற்றும் திருவிக நகர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போல நீலாங்கரை பிஸ்மில்லா நகர் 1வது தெருவில் வசித்து வரும் முகமது சையது புகாரி என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 10.30 மணி வரை நடந்தது.

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரசாலியாபுரம் தெருவில் உள்ள முகமது இத்ரீஷ் என்பவரது வீட்டில் இன்று காலை 6 மணி முதல் காலை 10.30 மணி வரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். முகமது இத்ரீஷ் என்பவருடன் வேறு யாரும் தொடர்பில் இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இதையொட்டி அவரது வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பு ேபாடப்பட்டிருந்தது.

The post கோவையில் கார் வெடித்த வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 30 இடங்களில் என்ஐஏ சோதனை: செல்போன், லேப்டாப், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NIA ,Tamil Nadu ,Cova ,Chennai ,Thiruvika Nagar ,Nilangarai ,Kovai Ukudam ,Bothanur ,Sugarangoda ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...