×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்: எழும்பூர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை ஆரம்பம்

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி. முருகன் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன் (59). இவர் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பணியாற்றிய போது அவருடன் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பியதாகவும், அறைக்கு தனியாக அழைத்து அத்துமீறியதாகவும், சம்மதம் இல்லாமல் செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும், பாலியல் ரீதியிலான வார்த்தைகளையும் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் பெண் எஸ்.பி குற்றம் சாட்டியிருந்தார்.

செல்போனில் ஐஜி அனுப்பிய ஆபாச தகவல்கள் ஆதாரமாக கொடுக்கப்பட்டு முருகன் மீது புகார் கொடுக்கப்பட்டது. கடந்த 2017 ஜூலை முதல் 2018 ஆகஸ்ட் வரை பலமுறை தனக்கு ஐ.ஜி முருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அதிகாரி 2018ல் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் மீது விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி சிபிசிஐடி விசாரணை நடத்தினால் மட்டுமே நியாயம் கிடைக்கும் என்றும் அதிமுக ஆட்சியில் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி முறையீட்டை ஏற்ற உயர் நீதிமன்றம் தெலங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றியது. தெலங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஐ.ஜி.முருகன் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டை ஏற்று தமிழ்நாட்டிலேயே வழக்கை நடத்த உச்சநீதிமன்றம் 2021ல் அனுமதி அளித்தது.

இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் அதிகாரி, 3 போலீஸ் அதிகாரிகள், டிரைவர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆனால், இறுதி அறிக்கை எதையும் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் ஐ.ஜி முருகன், ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்குமாறு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதினர். இதையடுத்து, முருகன் மீது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க ஆளுநர் அலுவலகமும், தமிழ்நாடு அரசும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஐ.ஜி முருகன் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் டிரைவர்கள் உள்பட 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அவர்களின் வாக்குமூலங்கள் உள்பட ஆவணங்களுடன் 112 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

The post பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்: எழும்பூர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை ஆரம்பம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,IG Murugan ,Elehampur court ,Chennai ,GG ,CPCID ,Murugan ,CBCID Police ,Dinakaran ,
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு முன்னாள்...