×

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2-ல் நடைபெற இருந்த I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து: கமல்நாத் பேட்டி

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2-ல் நடைபெற இருந்த I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை எதிர்கொள்ள நாடு முழுக்க 28 எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A. என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் மூன்று ஆலோசனை கூட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. இவைகளில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. கடைசியாக மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில்; இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல் முதலில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சிகள் நடந்த இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

The post மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2-ல் நடைபெற இருந்த I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து: கமல்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. ,Bopal, Madhiya Pradesh ,Kamalnath ,Bopal ,Bopal, Madya Pradesh ,Alliance General Meeting ,Madhea Pradesh ,
× RELATED வாக்கு சதவீதத்தில் குளறுபடி,...