×

காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து வழக்குகளிலும் சாமானிய மக்களின் குரலை உச்சநீதிமன்றம் கேட்கும்: தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து

டெல்லி: காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து வழக்குகளிலும் சாமானிய மக்களின் குரலை உச்சநீதிமன்றம் கேட்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். சிறு, குறு நிறுவனங்கள் தொடர்பாக வழக்கறிஞர் மாத்யூஸ் நெடும்பரா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தலைமை நீதிபதிக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் அரசியல் சாசனம் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் அளிப்பதாகவும், பொதுநலன் குறித்த வழக்குகளையோ சாமானிய மக்களின் குரலையே கேட்பதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தலைமை நீதிபதி சந்திரசூட் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கை தொடர்ந்து 16 நாட்கள் விசாரித்ததாகவும், காஷ்மீரில் வசிக்கும் தனி மனிதர்களின் கோரிக்கைகளும் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல இலகு ரக வாகன ஓட்டுவதற்கான உரிமம் பெற்றவர்கள் கனரக வாகனங்களை ஓட்டலாம் என்ற ஒன்றிய அரசின் புதிய உத்தரவால் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பரபரப்பு வழக்குகளை மட்டுமே அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்பதும், சாதாரண மக்களின் குரலை உச்சநீதிமன்றம் கேட்பதில்லை என்ற கருத்தும் தவறானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறு, குறு நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடியதால் தான் அந்த வழக்கை விசாரிக்கவில்லை என்றும் சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.

The post காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து வழக்குகளிலும் சாமானிய மக்களின் குரலை உச்சநீதிமன்றம் கேட்கும்: தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kashmir ,Chief Justice ,Chandrachute ,Delhi ,Chandrasoot ,Chandrasute ,Dinakaran ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...