×

வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்

பொன்னேரி, செப். 16: மீஞ்சூர் அடுத்த வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டது. இதில், 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி எரியூட்டப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இந்த அனல்மின் நிலையத்தில், நிலக்கரி கையாளுதல், கொதிகலன் கையாளுதல், டர்ஃபன் இயக்குதல், ஜெனரேட்டர் இயக்குதல், கடல் நீர் சுத்திகரிப்பு பகுதி, சாம்பல் கையாளும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு, நாளொன்றுக்கு 24 மில்லியன் யூனிட் மின் பகிர்மான கட்டமைப்புக்கு தயாரித்து வழங்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழக அரசு 70 சதவீதத்தை ஒன்றிய அரசுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 10ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை தொழிலாளர்கள் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான நேற்று ஒன்றிய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அனல்மின் நிலைய வாயிலில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வரும் இங்குள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், நிலக்கரி மற்றும் சாம்பல் துகள்களிலும், ஒப்பந்த தொழிலாளர்கள் சிரமத்துடன் பணியாற்றி வருகிறோம், விதிகளுக்கு மாறாக அத்தியாவசிய பணிகளில் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒன்றிய அரசு வேலை வாங்குகிறது.

ஏற்கனவே, தொழிலாளர் நலத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட உரிய நடவடிக்கை இல்லை. வல்லூர் அனல்மின் நிலைய பங்குதாரரான தமிழ்நாடு அரசு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டும் என்பதால் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் தினந்தோறும் 100 தொழிலாளர்கள் 15 நாட்கள் என சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஒன்றிய அரசு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்த கட்டமாக மின் உற்பத்தி பாதிக்கும் வகையில் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்து பேசினர்.

The post வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Vallur Thermal Power Station ,Ponneri ,Vallur thermal power ,Meenjur ,strike ,Vallur ,thermal ,power station ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்