- காவிரி நதி நீர் ஆணையம்
- உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- Duraimurugan
- KV குப்புரம்
- வேலூர்
- காவிரி நதி நீர் ஆணையம்
- தின மலர்
வேலூர், செப்.16: காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்ட பின்னரும் தண்ணீர் வழங்க முடியாது என்று கூறுவது தவறு என்று கே.வி.குப்பத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட துவக்க விழாவுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். டிஆர்ஓ மாலதி, திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தனர்.
விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்து 2 ஆயிரம் பயனாளிகளுக்கு உரிமை தொகையினை வழங்கி பேசியதாவது: வேலூரில் நடத்த வேண்டிய இந்நிகழ்ச்சியை கே.வி.குப்பத்தில் நடத்த காரணம், இது எனது சொந்த ஊர். கே.வி.குப்பம் பகுதி காட்பாடி சட்டமன்ற தொகுதியில் இருந்தபோது குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து அம்முண்டி வரை 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன். கடந்த 3 முறை எம்எல்ஏக்களாக இருந்தவர்களால் இத்தொகுதி பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த 15 ஆண்டுகளில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் நீதிமன்றம், பொதுப்பணித்துறை கட்டிடங்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வளாகங்கள், காட்பாடி பகுதிகளை மாநகராட்சியில் இணைத்தது, சட்டக்கல்லூரி, புதிய பாலாற்று பாலம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு பணிகள் நடந்தன. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் புதிதாக கல்லூரி, மருத்துவமனை வர உள்ளது. அதேபோன்று கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மகளிர் கலைக்கல்லூரி, தொழிற்பேட்டை, காவிரி கூட்டுக்குடிநீர், தாலுகா மருத்துவமனை ஆகியவையும் கொண்டு வரப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் ₹5 ஆயிரம் தர வேண்டும் என்று நாங்கள் அரசிடம் சொன்னோம். ஆனால் வெறும் ₹1,000 மட்டும் கொடுத்துவிட்டு சென்று விட்டார்கள். தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் என்று உள்ள திட்டங்களை போன்று பல திட்டங்கள் வர உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், அமலுவிஜயன், வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், தாசில்தார் கீதா, பிடிஓக்கள் சதீஷ்குமார், கல்பனா, ஒன்றியக்குழு தலைவர்கள் ரவிச்சந்திரன், சத்தியானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீத்தாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல. அது நம்முடைய உரிமை. உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை கேட்டால் இப்போது தண்ணீர் இல்லை என்கிறார்கள். அதற்காக மழை பெய்து அதிக தண்ணீர் வந்தால் தான் தண்ணீர் கொடுக்க முடியும். குறைந்த தண்ணீர் இருந்தால் கொடுக்க முடியாது என்று கர்நாடகா சொல்ல முடியாது. கையளவு தண்ணீர் இருந்தாலும் அதை எங்களுக்கு பங்கிட்டு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
ஆனால் ஆங்காங்கே அணைகளிலே தண்ணீரை வைத்துக்கொண்டு கே.ஆர் சாகரிலும் அதேபோன்று மற்ற அணை கட்டுகளிலும் நீரை தேக்கி வைத்துள்ளனர். ஆனால் எங்களுக்கு உரிய தண்ணீரை தர வேண்டும் என்று நாங்கள் கர்நாடகாவிடம் கேட்கவில்லை. ஆனால் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மையிடம் நாங்கள் தண்ணீரை கேட்டோம். அவர்கள் இரண்டு மாநிலத்திற்கும் பொதுவானவர்கள். அவர்கள் கர்நாடகத்தில் இருக்கிற அணைகளில் நீர் இருப்பை கணக்கிட்டு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை தரலாம் என முடிவு செய்து அறிவித்துள்ளனர். இருந்தாலும் அதனை தர மாட்டேன் என்று சொல்வது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா மீறுவதாகும். கர்நாடகத்தின் இந்தபோக்கு சரியானது அல்ல. அதற்காக அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்கள். அதனால் எங்களுக்கு ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை.
நாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடியாதா? நாமும் கூட்டலாம். அது ஒன்றும் பெரிய தவறில்லை. ஆனால் வரும் 21ம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு வரும்போது என்னென்ன நடந்தது என்பதை எங்களுடைய மூத்த வழக்கறிஞர் சொல்ல உள்ளார். அதன்பின் நமக்கு சாதகமாக இல்லை என்றால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். நாம் இப்போது எதிர்பார்ப்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்.
இல்லையென்றால் நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். எப்போது பார்த்தாலும் கர்நாடகத்தில் தமிழகத்துக்கு எதிராக திருவிளையாடல்கள் நடக்கிறது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மூத்தவர் அரசியல் முதிர்ந்தவர். கலைஞருக்கு வேண்டியவர் எனக்கும் வேண்டியவர். அவர் கூட நிலைமை புரிந்து கொள்ளாமல் பேசி இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. நீர்வளத்துறை அமைச்சராக இருக்க கூடிய சிவகுமார், மேகதாது அணை கட்ட வேண்டும் என்று அவர் தொகுதியில் சொல்கிறார். அவர் உணர்ச்சிவசப்படலாம். ஆனால் சித்தராமையாவிடத்தில் எனக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது.
என் வாழ்நாளில் இரண்டு பட்டேல்களை பார்த்துள்ளேன். குண்டுராவை பார்த்துள்ளேன். ராமகிருஷ்ண ஹெக்டேவை பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு எஸ்.எம்.கிருஷ்ணாவை பார்த்து இருக்கிறேன். காவிரி வரலாற்றில் ஆரம்பத்தில் இருந்து காவிரி பிரச்னை முதல் இந்த இலாகாவை கையில் வைத்திருப்பவன் நான். இதன் ஒவ்வொரு அணுவும், எனக்கு தெரியும் ஆகையால் இன்னும் நான் சித்ராமையா இடத்தில் மரியாதையாக அய்யா நீங்கள் தண்ணீர் தருவது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுவது என் மனதிற்கு வருத்தத்தை தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்ட பின்னரும் தண்ணீர் வழங்க முடியாது என கூறுவது தவறு கே.வி.குப்பத்தில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி வரும் 21ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம் appeared first on Dinakaran.