×

நிலம் அளவீடு செய்வதில் பிரச்னை விவசாயிகள்- வனத்துறையினர் மோதலில் பழங்குடியின பெண் பலி: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: நிலம் அளவீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்னையில் விவசாயிகள்- வனத்துறையினர் இடையே நடந்த மோதலில் பழங்குடியின பெண் பலியான சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தம்மபேட்டா மண்டலம் அஸ்வராபேட்டா கிராமத்தில் பழங்குடியின விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். வனத்துறைக்கு சொந்தமான பகுதி என்பதால் வனத்துறையினர் விவசாயிகள் பயிர் செய்து வரும் நிலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

ஆனால் கிராம மக்கள் நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். ஆகவே தாங்கள் பயன்படுத்தி வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக பழங்குடியின விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கு பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், இருதரப்பு பிரச்னையால் நிலத்தை வருவாய்துறை மூலம் அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று நிலஅளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சிலர் போலியான நில ஆவணங்கள் வைத்து நில அளவீடு பணி நடைபெறுவதாக வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிலர் அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், திருப்பதம்மா என்ற பெண் விவசாயிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கம்மம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திருப்பதம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வனத்துறையினர் அராஜகத்தால் பெண் விவசாயி இறந்ததாக கூறி கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post நிலம் அளவீடு செய்வதில் பிரச்னை விவசாயிகள்- வனத்துறையினர் மோதலில் பழங்குடியின பெண் பலி: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumalai ,
× RELATED தெலங்கானாவில் இன்று பிரசாரம்...