விருதுநகர், செப்.16: விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கு 21ம் தேதி சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 20 நாட்களுக்குள் கடன் ஆணைகள் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் 3 புதிய புகைப்படம், வங்கி joint account பாஸ்புக் நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், ஆதார் நகல், பான் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விபரம், பத்து, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை. நமது மாவட்டத்திலுள்ள மேற்படிப்பு படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post விருதுநகர் மாவட்ட மாணவர்களுக்கு 21ம் தேதி சிறப்பு கல்விக்கடன் முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
