
பேரையூர், செப். 16: பேரையூரில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. உசிலம்பட்டி ஆர்டிஓ ரவிச்சந்திரன், பேரையூர் டிஎஸ்பி இலக்கியா தலைமை வகித்தனர். தாசில்தார் ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மதனகலா, இளங்கோ முன்னிலை வகித்தனர். இதில் பேரையூர், சாப்டூர், சேடபட்டி, நாகையாபுரம், டி.கல்லுப்பட்டி, வி.சத்திரப்பட்டி, வில்லூர் பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் விழா கமிட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்டிஓ கூறுகையில், ‘புதிய இடங்களில் சிலைகள் வைக்க கூடாது, ஏற்கனவே வழிபட்டு வந்த இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்கப்பட வேண்டும். கூரை பந்தல், சாமியான பந்தல் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பந்தல்கள் அமைக்க கூடாது.
சிமெண்ட் மற்றும் தகரசெட்டுகள் மட்டுமே அமைக்க வேண்டும். தனியார் இடமாக இருந்தால் அதன் உரிமையாரிடம் அனுமதியும், அரசு பொது இடமாக இருந்தால் விஏஓவிடமும் சிலை வைக்க அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் அப்பகுதியிலுள்ள தீயணைப்பு நிலையத்தில் முறையாக தகவல் தெரிவித்து இருக்க வேண்டும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது. அதிக சத்தம் எழுப்பாத ஸ்பீக்கர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விழா கமிட்டியாளர்களே சிலைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும்’ என்றார். ெதாடர்ந்து டிஎஸ்பி கூறுகையில், ‘மற்ற மதக்கோயில் அருகில் முகம் சுழிக்கும் எதிர்வினை யான கோஷங்கள் போடக்கூடாது.
10 அடிகளுக்கு மேல் சிலைகள் இருக்க கூடாது, 5 நாட்களுக்கள் விழாவினை முடித்து கொள்ள வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. மாட்டு வண்டிகளில் சிலைகளை கொண்டு செல்லும் போது மேலே செல்லும் மின்வயர்கள் உரசாதவாறு பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். போலீசாரின் பணிகளை தடுக்காதவாறு ஒத்துழைப்பு தர வேண்டும். விதிமுறைகளை மீறி நடக்கும் விழா கமிட்டியாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு அடுத்தமுறை சிலை வைக்க அனுமதி தர இயலாது, எனவே போலீசார் ஒத்துழைப்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்’ என்றார். இதில் துணை தாசில்தார் பிரேம் கிஷோர், துணை தாசில்தார் (தேர்தல்) கருப்பையா, டி.கல்லுப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் குருசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post பேரையூரில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.