×

முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு 2 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தூத்துக்குடி: முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர், கலியாவூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நடந்து வந்த ஆற்று மணல் கடத்தல் தொடர்பாக கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு (எ) ராமசுப்பிரமணியன் (41) மற்றும் மாரிமுத்து (32) மீது 27.10.2022 மற்றும் 13.4.2023 ஆகிய தேதிகளில் புகார் அளித்தார்.

இதுகுறித்து ராமசுப்பு மற்றும் மாரிமுத்து மீது முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பு, மாரிமுத்துவுடன் கடந்த 25.4.2023 அன்று மதியம் 12.45 மணியளவில் முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து அங்கு பணியில் இருந்த விஏஓ லூர்து பிரான்சிசை வெட்டி கொன்றனர். இதுதொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்கு பதிந்து ராமசுப்பு, மாரிமுத்வை கைது செய்தனர். இந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. தொடர்ந்து குறுக்கு விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு கடந்த 11ம் தேதி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி செல்வம், நேற்று மதியம் தீர்ப்பளித்தார். இதில் விஏஓ கொலை வழக்கில் ராமசுப்பு, மாரிமுத்து ஆகியோருக்கு ஐபிசி 449 பிரிவில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும், 302 பிரிவில் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரமும், 506 (2) பிரிவில் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதன்படி கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கொலை நடந்து 5 மாதங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post முறப்பநாடு விஏஓ கொலை வழக்கு 2 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Court ,Thuthukudi ,Thoteukudi Court ,Grama Administrative Officer ,
× RELATED ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை பாலியல்...