×

திருவாரூர் பெண் டாக்டர் காய்ச்சலால் உயிரிழப்பு: திருச்சியிலும் ஒருவர் பலி

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் காய்ச்சலுக்கு சிகிச்சையில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் நேற்று உயிரிழந்தார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரவி மகள் சிந்து (25). திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த இவருக்கு, கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் இருந்தது. நேற்றுமுன்தினம் இரவு திடீரென மூச்சு திணறல் அதிகமானதால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிந்து அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சிந்து இறந்தார். அவரது உடலுக்கு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து சிந்துவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் சொந்தா ஊரான கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் (பொ) டாக்டர் அமுதவடிவு கூறுகையில், ‘பயிற்சி மருத்துவர் சிந்துவிற்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன் வயிற்றுப்போக்கு, வாந்தி இருந்துள்ளது. அவர் சுயமாகவே ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் உடல்நிலை சரியாகாததால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு டெங்கு உள்ளிட்ட அனைத்து காய்ச்சலுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பரிசோதனைகளும் நெகட்டிவ் என்றுதான் வந்துள்ளது. ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகள் சென்னை கிங்ஸ் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் உள்ளிட்ட அனைத்து சோதனையும் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளுக்கு பின்னர் மருத்துவர் இறப்புக்கான காரணம் தெரியவரும். காய்ச்சலுக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி மருத்துவரை போல, தாங்களாவே சிகிச்சை எடுத்து கொள்ளாமல் பொதுமக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது உறவினர்கள், குழந்தைகள் என யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்’ என்றார்.

திருச்சியில் பெண் பலி: திருவானைக்காவல் நரியன்தெருவை சேர்ந்த ராஜசுகுமார் மனைவி கனகவல்லி (38). கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கனகவல்லி, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை எனவும், அவருடைய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததும் தெரியவந்தது என்றனர்.

The post திருவாரூர் பெண் டாக்டர் காய்ச்சலால் உயிரிழப்பு: திருச்சியிலும் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvarur Government Medical College ,Kerala State ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்