×

கையளவு தண்ணீர் இருந்தாலும் பங்கிட்டு தர வேண்டும் காவிரியில் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல… அது உரிமை: அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்

வேலூர்: காவிரியில் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல… அது உரிமை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல. அது நம்முடைய உரிமை. உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை கேட்டால் இப்போது தண்ணீர் இல்லை என்கிறார்கள். அதற்காக மழை பெய்து அதிக தண்ணீர் வந்தால் தான் தண்ணீர் கொடுக்க முடியும். குறைந்த தண்ணீர் இருந்தால் கொடுக்க முடியாது என்று கர்நாடகா சொல்ல முடியாது. கையளவு தண்ணீர் இருந்தாலும் அதை எங்களுக்கு பங்கிட்டு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

கே.ஆர் சாகரிலும், மற்ற அணை கட்டுகளிலும் நீரை தேக்கி வைத்துள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்தில் இருக்கிற அணைகளில் நீர் இருப்பை கணக்கிட்டு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை தரலாம் என முடிவு செய்து அறிவித்துள்ளனர். இருந்தாலும் அதனை தர மாட்டேன் என்று சொல்வது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா மீறுவதாகும். கர்நாடகத்தின் இந்தபோக்கு சரியானது அல்ல. அதற்காக அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்கள். அதனால் எங்களுக்கு ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை.

நாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடியாதா? நாமும் கூட்டலாம். அது ஒன்றும் பெரிய தவறில்லை. வரும் 21ம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு வரும்போது என்னென்ன நடந்தது என்பதை எங்களுடைய மூத்த வழக்கறிஞர் சொல்ல உள்ளார். அதன்பின் நமக்கு சாதகமாக இல்லை என்றால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். நாம் இப்போது எதிர்பார்ப்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மூத்தவர் அரசியல் முதிர்ந்தவர். நீங்கள் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுவது என் மனதிற்கு வருத்தத்தை தந்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சராக இருக்க கூடிய சிவகுமார், மேகதாது அணை கட்ட வேண்டும் என்று அவர் தொகுதியில் சொல்கிறார். அவர் உணர்ச்சிவசப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கையளவு தண்ணீர் இருந்தாலும் பங்கிட்டு தர வேண்டும் காவிரியில் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல… அது உரிமை: அமைச்சர் துரைமுருகன் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : kaviri ,minister ,thurimurugan ,thuraymurugan ,Vellore District ,Caviri ,Tremurugan ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...