×

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

தூத்துக்குடி: ‘குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்போது பல்வேறு புதிய உதிரிபாக தொழிற்சாலைகள் உருவாகும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்’ என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார். தூத்துக்குடியில் ஏபிசி மகாலெட்சுமி மகளிர் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சி, வஉசி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆய்வு மையம் சந்திரயான் 3ஐ வெற்றிகரமாக செலுத்தியதை தொடர்ந்து ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய ஆராய்ச்சிகளில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஈடுபட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேவையான 2400 ஏக்கரில் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 400 ஏக்கர் நிலம் இந்த ஆண்டு நவம்பருக்குள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அங்கு காம்பவுண்டு சுவர், கட்டடம் கட்டும் பணி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவுபெற்று, ராக்கெட் ஏவும் பணி தொடங்கும். இதற்கான கட்டுமான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு ரூ.700 கோடி இருக்கும்.

இந்த ராக்கெட் ஏவுதளம் மூலமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகும். ராக்கெட் ஏவுதளத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கக் கூடிய பல தொழில் நிறுவனங்கள் இந்த பகுதியில் புதிதாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் செமி கண்டக்டர் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகளையும் அரசு தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kulasekaranpatnam ,ISRO ,Shivan ,Thoothukudi ,Sivan ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...