×

ரூ.1000 உரிமை தொகை திட்டத்தால் முதல்வரின் செல்வாக்கு மகளிர் மத்தியில் உயரும்: திருமாவளவன்

விருதுநகர்: மகளிர் உரிமை தொகை திட்டம் முதல்வருக்கு, மகளிர் இடையே செல்வாக்கை உயர்த்தும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பார்க்கிறது. பிற மாநிலங்கள் பின்பற்றக் கூடிய முன்னோடி திட்டமாக விளங்குகிறது. பெண்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. முதல்வருக்கு மகளிர் இடையே செல்வாக்கை உயர்த்தும். இனி இந்த திட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது. சத்துணவு திட்டத்தை எப்படி அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் செயல்படுத்தினார்களோ அதைப்போல் மகளிர் திட்டத்தை எந்த காலத்திலும் ஆட்சிக்கு வருவோர் நிறுத்த முடியாது.

இந்தியா கூட்டணி உருவானது முதல் மோடி பதற்றத்தில் இருக்கிறார். மனதில் பட்டதை எல்லாம் பேசுகிறார். இந்தியா கூட்டணியை எப்படியாவது பிளவுபடுத்த வேண்டுமென கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறார். ஆனால் கூட்டணி கட்சிகள் பிளவுபட வாய்ப்பு இல்லை. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பிரச்னை எதுவும் இல்லை. பாஜவை வீழ்த்துவது தான் கூட்டணி கட்சிகளின் நோக்கம். பாஜவை வீழ்த்தியப் பிறகு பிரதமர் யார் என்ற சூழல் கனியும். அப்போது முடிவு செய்வோம். எளிய மக்கள் பயன்படுத்தும் ஆவின் பொருட்கள், மலிவான விலையில் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். விலை உயர்வை மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post ரூ.1000 உரிமை தொகை திட்டத்தால் முதல்வரின் செல்வாக்கு மகளிர் மத்தியில் உயரும்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Virudhunagar ,Chief Minister ,Liberation Tigers Party ,
× RELATED நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை