
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வரும் 22ம் தேதி நடத்தப்படுவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த உடனடி மாணவர் சேர்க்கையில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் வரும் 22ம் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கலந்தாய்வில் நேரடியாக வந்து பங்கேற்கலாம். இந்த உடனடி மாணவர் சேர்க்கை பல்கலையின் இணைப்பு கல்லூரிக்கு மட்டும் நடக்கிறது. உறுப்பு கல்லூரிகளுக்கு இல்லை. இந்த கலந்தாய்வில் இடம் கிடைக்கும் மாணவர்களிடம் இருந்து மட்டும் கலந்தாய்வு கட்டணம் பெறப்படும். இந்த மாணவர் சேர்க்கைக்கு நகர்வு முறை கிடையாது.
இதில், பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று கலந்தாய்வை தவறவிட்டவர்கள், இடம் கிடைத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள் கலந்து கொள்ளலாம். இடைநிறுத்தம் செய்தவர்கள், ஏற்கனவே இடம் கிடைத்தவர்கள் பங்கேற்க கூடாது. இக்கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன்பு கலந்தாய்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்கள் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்கள் ரூ.1,500, இதர பிரிவு மாணவர்கள் ரூ.3 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். இணைப்பு கல்லூரிகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். இந்த உடனடி மாணவர் சேர்க்கையில் பங்கேற்கும் மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்படும்.
சேர்க்கையின் போது கல்லூரிகளில் உள்ள காலியிடம் திரையில் காண்பிக்கப்படும். தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப்படிப்பை தேர்வு செய்ய அழைக்கப்படுவர். இதில், இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு கட்டணத்தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம். பணம் செலுத்த பல்கலைக்கழக வளாகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு காத்திருப்பு பட்டியல் உருவாக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கு பின் ஒரு வார காலத்திற்கு பிறகு மாணவர் சேர்க்கை காலியிடங்கள் ஏதாவது இருந்தால் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
உடனடி மாணவர் சேர்க்கைக்கான வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை வரும் 21ம் தேதி tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் 94886-35077, 94864-25076 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வேளாண் பல்கலை. இணைப்பு கல்லூரிகளில் இளங்கலை படிப்புக்கு உடனடி சேர்க்கை: வரும் 22ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.