×

கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வந்தவர்கள் குமரிக்குள் நுழைய தடை: திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

நாகர்கோவில்: கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் குமரிக்கு வந்த நர்சிங் மாணவன் உள்பட 3 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. களியக்காவிளை உள்பட 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து கட்டிட வேலை உள்பட பல்வேறு பணிகள் நிமித்தமாக அதிகம் பேர் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.

இவர்களில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரள எல்லையையொட்டி உள்ள குமரி மாவட்ட களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று முன்தினம் அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த பெண் ஒருவருக்கு காய்ச்சல்பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அவரது வீடு களியக்காவிளையில் உள்ளது. அவர் கேரளாவில் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார். ஊருக்கு வரும் வழியில் அவரை சோதனை செய்தனர். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததும், பாறசாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது.

எனவே இன்னும் காய்ச்சல் முழுமையாக குணம் அடையாததால், அவரை மீண்டும் திருப்பி அனுப்பினர். இதே போல் குமரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் மாணவன், காய்ச்சல் பாதித்த நிலையில் கேரளாவில் இருந்து கல்லூரிக்கு வந்தான். எல்லையில் நடந்த பரிசோதனையில் காய்ச்சல் இருந்தது உறுதியானதால் அவனையும் திருப்பி அனுப்பினர். இதே போல் மேலும் ஒரு பெண்ணும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

The post கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வந்தவர்கள் குமரிக்குள் நுழைய தடை: திருப்பி அனுப்பிய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kumari ,Nagercoil ,Kerala… ,Dinakaran ,
× RELATED குமரியில் வண்ண, வண்ண ஸ்டார்கள்...