×

பெண்கள் அர்ச்சகர் பணிக்கு நியமனம் தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூகநீதி சார்ந்த உரிமை சமூக நிலையிலும், சட்ட ரீதியாகவும் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்தவர்கள் யாரும் அர்ச்சகராகலாம், அதற்கு சாதி தடையில்லை என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் பல சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, இந்த அர்ச்சகர் பணியில் பாலின சமத்துவம் காணும் முறையில் ஆகம விதிகளை கற்று தேர்ந்த பெண்கள் மூன்று பேர் ரம்யா, கிருஷ்ணவேணி மற்றும் ரஞ்சிதா ஆகியோர் அர்ச்சகர்களாக நியமனம் பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அர்ச்சகர் பணி நியமனம் பெற்றுள்ள பெண் அர்ச்சகர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், பெண்களை ஒதுக்கி வைத்து தாழ்வுபடுத்தி, கோயில் கருவறைக்குள் நுழைவதை தடுத்து வரும் சனாதன கருத்துகளை நிராகரித்து சமூகநீதி உரிமைகளை நிலை நாட்டுவதில் உறுதி காட்டி வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்று, பாராட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெண்கள் அர்ச்சகர் பணிக்கு நியமனம் தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Communist ,Tamil Nadu government ,Chennai ,State Secretary of the ,Communist Party ,of ,India ,Mutharasan ,
× RELATED சமூக சீர்திருத்த விழிப்புணர்வு...