×

போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி மோதல்கள் குறைந்தது: மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் ரவுடிகள் தொடர்ந்து கண்காணிப்பு

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இருவேறு சாதியினருக்கும் இடையேயான கொலை சம்பவங்கள் 43 விழுக்காடாக குறைந்துள்ளது. மேலும், ரவுடிகள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் ‘ரவுடிகளுக்கு எதிரான வேட்டை’ என்ற திட்டத்தின் மூலம் மாவட்ட வாரியாக போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக சங்கர் ஜிவால் மற்றும் சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருண் ஆகியோர் பதவியேற்ற பிறகு தென் மாவட்டங்களில் ரவுடிகளின் ஆட்டத்தை முற்றிலும் ஒழித்துள்ளனர். மேலும், சாதிய மோதல்களும் தடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சாதி மோதல்கள் 43 சதவீதம் வரை குறைந்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக ஊடகங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை குற்றங்கள் அதிகமாகிவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் ஆகஸ்ட் 2022 வரை 364 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 2023 வரை 323 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. மேலும், தென் மண்டலத்தில் இரு வேறு சமூகத்தினரிடையே நடந்த கொலை வழக்குகளை பொறுத்தவரை 2022 ஆகஸ்ட் வரை 82 வழக்குகளும், இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 74 வழக்குகளும் பதிவாகி உள்ளன. எனவே சாதி ரீதியான கொலை வழக்குகளும் குறைந்துள்ளன.

அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் தாக்கலான கொலை வழக்குகளை பொறுத்தவரை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1090 வழக்குகளும் இந்த ஆண்டில் 1052 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. எனவே மாநிலம் முழுவதும் ஒப்பிட்டாலும் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொலை வழக்குகள் குறைந்துள்ளன. இவற்றை மேலும் கட்டுப்படுத்திட ஒவ்வொரு வாரமும் ‘தீவிர நடவடிக்கை’ அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் மேற்பார்வையில் நடத்தப்பட்டு வரப்படுகிறது.

குறிப்பாக சாதி ரீதியிலோ, முன்விரோதம் காரணமாகவோ ரவுடிகளுக்கு இடையிலான மோதல் காரணமாகவோ கொலை சம்பவங்கள் நிகழா வண்ணம் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகின்றனர். நீதிமன்ற விசாரணை தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமையிட கூடுதல் டிஎஸ்பி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, முக்கிய வழக்குகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகர், மாவட்டம் கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறைவு (%)
(2022 ஆகஸ்ட்) (2023 ஆகஸ்ட்)
திருநெல்வேலி மாவட்டம் 35 30 14%
திருநெல்வேலி மாநகரம் 15 11 27%

மாநகர், மாவட்டம் சாதி மோதல் கொலை வழக்குகளின் எண்ணிக்கை குறைவு (%)
(2022 ஆகஸ்ட்) (2023 ஆகஸ்ட்)
திருநெல்வேலி மாவட்டம் 10 7 30%
திருநெல்வேலி மாநகரம் 7 4 43%

The post போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி மோதல்கள் குறைந்தது: மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் ரவுடிகள் தொடர்ந்து கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,District S. GP ,Chennai ,Tirunelveli district ,District S.C. GP ,Routies ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகராட்சியின் 3 திமுக...