×

சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல் தொல்லை புகார் ஆஸ்திரேலிய முன்னாள் மாணவி காணொலி மூலம் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல் தொல்லை புகார் அளித்த முன்னாள் மாணவி ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலி மூலம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்தபோது, அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் மாணவி ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா தரப்பில் புகார் அளித்த மாணவி ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்ததாகவும் கூறப்படும் நிலையில், புகாரின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த முன்னாள் மாணவியை, சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அந்த பெண், சிவசங்கர் பாபா மிகவும் செல்வாக்கானவர் என்பதால் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு வந்து நேரில் ஆஜராக இயலாது என்றும், காணொலி வாயிலாக எப்போது வேண்டுமானாலும் வாக்குமூலம் கொடுக்க தயாராக இருப்பதால் அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, வாக்குமூலத்தை பெறுவதற்கான தேதியை செங்கல்பட்டு நீதிமன்றம் முடிவு செய்து, காணொலி வாயிலாக முன்னாள் மாணவியை ஆஜராக சொல்லி, வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். மேலும் மாணவியின் வாக்குமூலம் நிறைவுபெற்ற பிறகு, சிவசங்கர் பாபாவின் மனு விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

The post சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல் தொல்லை புகார் ஆஸ்திரேலிய முன்னாள் மாணவி காணொலி மூலம் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sivasankar Baba ,Chennai ,Sivattankar Baba ,Chengalpattu ,Australia ,Court ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...