×

துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் பலி: காஷ்மீரில் 3வது நாளாக பயங்கரவாதிகள் வேட்டை: டிரோன்கள் மூலம் மறைவிடத்தை கண்டுபிடிக்க ராணுவம் முயற்சி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 4வது வீரர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. அங்கு மறைந்து இருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள் மூலம் ராணுவம் 3வது நாளாக தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளது.ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் கோகர்நாக் பகுதியில் கடோலில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை ராணுவப்படைகளும், காஷ்மீர் போலீஸ் படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. பயங்கரவாதிகள் மலைப்பாங்கான பகுதியில் இருந்து குறிவைத்து சுட்டதில் ராணுவத்தின் 19 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோஞ்சக், ஜம்மு காஷ்மீர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹுமாயூன் பட் ஆகியோா் கொல்லப்பட்டனர்.

4வதாக ஒரு ராணுவ வீரரை காணவில்லை. 3 நாட்கள் ஆகியும், கிட்டத்தட்ட 50 மணி நேரம் கடந்தும் பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை ராணுவ வீரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் மாயமான இன்னொரு ராணுவ வீரரும் பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்து விட்டது. இதையடுத்து பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைக் கண்டறிய நேற்று டிரோன்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினார்கள்.

டிரோன்கள் கண்காணிப்பு அடிப்படயில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தின் மீது மோட்டார் குண்டுகளை வீசி பாதுகாப்பு படையினர் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடம் முழுவதும் நமது பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு தொடர்ச்சியாக டிரோன்களை பறக்க விட்டு ராணுவத்தினர் பயங்கரவாதிகளை அழிக்க சரமாரியாக தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

*வீரர்கள் பலியான போது பா.ஜ கொண்டாடியது
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, அவரது மகளும், ஊடக ஆலோசகருமான இல்திஜா முப்தியுடன், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பாட்டின் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறியதாவது: ஹுமாயுன் பாட் இளம் தியாகி. அவனது பெற்றோரின் உலகம் அழிந்து விட்டது. நாங்கள் என்ன சொல்ல முடியும்? இதை நாங்கள் எத்தனை முறை காண்போம்? அவருக்கு திருமணமாகி இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.

ஜம்மு காஷ்மீரின் துரதிர்ஷ்டம் இது. நமது இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை ரசித்து, திட்டமிட வேண்டிய போது கல்லறைகளுக்கு செல்வது தொடர்கிறது. இந்த சோகமான நேரத்தில் டெல்லியில் பாஜவினர் கொண்டாடியதை விட மோசமான சோகம் என்ன வேண்டும்?. வீரர்கள் கொல்லப்பட்ட நாளில் பா.ஜ கொண்டாட்டம் நடந்தது வெட்கக்கேடானது. இவ்வளவு பெரிய சோகம் நடந்த பின்னரும் பாஜ தலைமையகத்தில்அவர்கள் கொண்டாடினார்கள். இது மிகவும் வருத்தமளிக்கிறது’ என்றார்.

*கர்னல் மன்பிரீத் சிங் உடல் தகனம் 6 வயது மகன் கடைசி வணக்கம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட கர்னல் மன்பிரீத் சிங் உடல் அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள பரன்ஜியன் கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அப்போது மன்பிரீத்சிங்கின் 6 வயது மகன் கபீர் ராணுவ சீருடையில் தனது தந்தைக்கு கடைசியாக ‘ஜெய்ஹிந்த் பாப்பா’ என்று கூறி இறுதி வணக்கம் செலுத்தினார். இதே ேபால் வீரமரணம் அடைந்த மேஜர் ஆஷிஷ் தோன்சக் உடல் அரியானா மாநிலம் பானிபட்டில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

The post துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் பலி: காஷ்மீரில் 3வது நாளாக பயங்கரவாதிகள் வேட்டை: டிரோன்கள் மூலம் மறைவிடத்தை கண்டுபிடிக்க ராணுவம் முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Dinakaran ,
× RELATED காஷ்மீரில் நடந்த பயங்கரவாத...