×

சாகிப் ஹசன் 80, தவ்ஹித் 54, நசும் 44 வங்கதேசம் 265 ரன் குவிப்பு: ஷர்துல், ஷமி அபார பந்துவீச்சு

கொழும்பு: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் சூப்பர்-4 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில், இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்தது.
பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டன. திலக் வர்மா அறிமுகமானார். வங்கதேச அணியில் புதுமுக வீரராக டன்ஸிம் சாகிப் சேர்க்கப்பட்டார். டன்ஸிட் ஹசன், லிட்டன் தாஸ் இணைந்து வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். ஷமி வேகத்தில் தாஸ் டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேச அணி அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.

டன்ஸிட் ஹசன் 13, அனாமுல் ஹக் 4 ரன் எடுத்து ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, வங்கதேசம் 5.4 ஓவரில் 28 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. மெஹிதி ஹசன் மிராஸ் 13 ரன் எடுத்து அக்சர் சுழலில் ரோகித் வசம் பிடிபட, 59/4 என வங்கதேசம் மேலும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் – தவ்ஹித் ஹ்ரிதய் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்து அசத்தியது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷாகிப் ஹசன் 80 ரன் எடுத்து (85 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஷர்துல் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஷமிம் உசேன் 1 ரன்னில் நடையை கட்டினார்.

அரை சதம் விளாசிய தவ்ஹித் 54 ரன் எடுத்து (81 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஷமி வேகத்தில் திலக் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நசும் அகமது 44 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் குவித்தது. மஹேதி ஹசன் 29 ரன், டன்ஸிம் ஹசன் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 10 ஓவரில் 65 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

ஷமி 2, பிரசித், அக்சர், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 266 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ரோகித், ஷுப்மன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர்.அறிமுக வேகம் டன்ஸிம் சாகிப் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரோகித் டக் அவுட்டானார். அடுத்து வந்த திலக் வர்மா 5 ரன் எடுத்து டன்ஸிம் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, இந்தியா 17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது.

The post சாகிப் ஹசன் 80, தவ்ஹித் 54, நசும் 44 வங்கதேசம் 265 ரன் குவிப்பு: ஷர்துல், ஷமி அபார பந்துவீச்சு appeared first on Dinakaran.

Tags : Sahib Hasan ,Tawhith ,Nasasum ,Bangladesh ,Shartul ,Shami Abara ,Colombo ,Super- ,round ,Asian Cup ODI tournament ,India ,Dinakaran ,
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...