
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மறைந்த தலைவர் அண்ணா பற்றி பேசிய கருத்து பற்றி கேட்கிறீர்கள். அதிமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை அவர் கைவிட வேண்டும். இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். முத்துராமலிங்க தேவரும் அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள். அண்ணா ஆட்சி காலத்தில்தான் முத்துராமலிங்க தேவரை நினைவுகூரும் வகையில் பல்வேறு அரசு உத்தரவுகள் போடப்பட்டு அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. எந்த புத்தகத்தில் அண்ணாவை பற்றி அண்ணாமலை படித்தார், என்ன படித்தார்.
திபுதிபுன்னு வந்துட்டு, அண்ணாவை பற்றி தவறான கருத்து சொன்னா, எந்த தொண்டனும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டான். இனிமேலும் இதுபோன்று அண்ணாமலை பேசினால் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி, நடக்காத விஷயத்தை நடந்த மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் விஷயத்தை நிச்சயமாக ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். அண்ணா பற்றிய அண்ணாமலையின் கருத்தால் கூட்டணி கட்சிகளான அதிமுக – பாஜ இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post அண்ணா பற்றி பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.