×

சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் பாதுகாப்பு ஒத்திகை ஹெலிகாப்டர் மூலம் தீவிரவாதிகள் வேட்டை: ஊழியர்கள் மீட்பு

சென்னை: சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை நடந்தது. இதில், ஊழியர்களை தீவிரவாதிகள் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த போது, ஹெலிகாப்டர் மூலம் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்து அதிரடியாக ஊழியர்களை மீட்டனர்.தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை சென்னையில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக கடந்த 11ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையிலும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நேற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், மாநில உள்துறை, வருவாய்துறை, பொதுத்துறை, ஒன்றிய உளவுத்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை துறைமுகம் ஆணையம், தமிழ்நாடு தீயணைப்பு, கடலோர பாதுகாப்பு குழு, சென்னை மாவட்ட ஆட்சியர், ரயில்வே, சென்னை விமான நிலைய, இந்திய ரிசர்வ் வங்கி, இந்து சமய அறநிலையத்துறை, நட்சத்திர ஓட்டல் மேலாளர்கள், வணிக வளாக நிர்வாகிகள் என 28 பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் சென்னையில் எந்தெந்த இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்க செய்வது, பொதுமக்களை பிணை கைதிகளாக எந்தெந்த நட்சத்திர ஓட்டல், எந்த வணிக வளாகத்தில் பிடித்து வைப்பது என்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை பின்புறம் உள்ள அம்மா மாளிகையில் இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலகத்தில் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது முகமூடி அணிந்து தீவிரவாதிகள் போல் துப்பாக்கியுடன் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர்களை பிணை கைதிகள் போல் பிடித்து வைத்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் உண்மையாக நம்மை சினிமா காட்சி போல் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக பதற்றம் அடைந்தனர். சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் மூலம் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அம்மா மாளிகை கட்டிடத்திற்குள் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். பிறகு தீவிரவாதிகளிடம் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். அப்போது தான் ஊழியர்களுக்கு இது பாதுகாப்பு ஒத்திகை என்று தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் அம்மா மாளிகையில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

The post சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் பாதுகாப்பு ஒத்திகை ஹெலிகாப்டர் மூலம் தீவிரவாதிகள் வேட்டை: ஊழியர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mother House of Chennai ,Chennai ,National Security Force ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...