×

கேம்களுடன் சூப்பர் ரெஸ்டாரெண்ட்

சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் விளையாட்டுகளுடன் கூடிய உணவகம், லேக் வீயு ரெஸ்டாரண்ட், ரூப் டாப் ரெஸ்டாரண்ட் என்று பல்வேறு தரப்பட்ட உணவகங்கள் அமைந்துள்ளன. உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் உணவின் ருசிக்காக மட்டுமில்லாமல் புதிய அனுபவத்திற்காகவும் வரத் தொடங்கி உள்ளனர். இதனால் பல இடங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக கேம்கள் கொண்ட உணவகங்களை நிறுவி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மேடவாக்கம் செந்தமிழ் நகரில் அமைந்துள்ள மூன்பவ் கேஃபே & ரேஜ் ரூம் ரெஸ்டாரண்டில் சுவையான உணவு மட்டுமில்லாமல் புதிய கேம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளோம் என்று நம்மிடம் பேசத்துவங்கினார் உணவகத்தின் உரிமையாளர் அருண் பால்.“விருதுநகர்தான் எங்களுக்கு சொந்த ஊரு. சென்னைக்கு வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது. திருச்சியில் என்னுடைய பட்டப்படிப்பை முடித்தேன். எனக்கு சிறிய வயதில் இருந்தே பிசினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை.

அதனால் 2021ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் உணவகத்தைத் தொடங்கினேன். என்னுடைய நண்பர்கள் சிலர் உணவகம் நடத்தி வருகின்றனர். அவர்களின் ரெஸ்டாரண்ட்டில் பணிபுரியும் சமையல்காரர்களிடம் இருந்து இந்திய, சீன உணவு வகைகளைத் தயார் செய்ய கற்று கொண்டேன். இதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு தற்போது உணவகம் இயங்கி கொண்டிருக்கும் இடத்திலேயே மூன் பவ் கிளவுடு கிச்சனை நானும், எனது அண்ணன் ரஞ்சிதும் இணைந்து நடத்தினோம். இந்த கிச்சனில் உணவுகளைத் தயார் செய்து ஆன்லைன் மூலமாக டெலிவரி செய்து வந்தோம். நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட உணவுக்கான வரவேற்பு வாடிக்கையாளர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. இது எங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து உணவகத்தை விரிவுபடுத்தலாம் என்ற எண்ணத்தில் டைனிங் டேபிள், கேம்கள் என்று வைத்து உணவகத்தை விரிவுபடுத்தினோம்.

இதில் 25 நபர்கள் அமர்ந்து சாப்பிடுவது போல் வடிவமைத்தோம். இதேபோல் உணவகத்தை 5 மாதங்கள் நடத்தினோம்.உணவகத்தில் மேலும் சில மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போதுதான் உணவகத்திற்கு வருபவர்கள் சிறிது நேரம் விளையாடி விட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து போர்டுகேம்ஸ், டிவி வீடியோ கேம்களை அறிமுகம் செய்தோம். இதில் விளையாடிய பின்பு சாப்பிட வருபவர்கள் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் உணவுகளை ருசித்து நிதானமாக சாப்பிட்டனர். இதனுடைய அடுத்த கட்டம்தான் இந்த ரேஜ் ரூம் ஐடியா. பெங்களூர், மும்பை போன்ற பகுதிகளில் இது மிகவும் பிரபலம். அதாவது, ஒரு அறைக்குள் உடையக்கூடிய பொருட்களை வைத்து, அதனை வாடிக்கையாளர்கள் உடைத்து விளையாடுவது போல் இருக்கும். இதற்காக நாங்கள் தனியாக விலை நிர்ணயித்துள்ளோம். ரேஜ் ரூமிற்குள் அனுப்புவதற்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு உடல் முழுவதையும் மூடும் வகையில் துணியைக் கொடுப்போம்.

மேலும் கை கிளவுஸ், தலைக்கவசம் என்று தருகிறோம். இதோடு ரூ.200க்கான கூப்பன் ஒன்றையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறோம். உடைந்த பொருட்களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆய்வு கிட்டத்தட்ட 70 சதவிதம் முடிந்துள்ளது. விளையாட்டுடன் உணவு என்பதால் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் இதன் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளனர்’’ என்று ரேஜ் ரூம் குறித்து விளக்கம் கொடுத்த பால் தொடர்ந்து பேசினார். “இந்திய சீன உணவுகளில் கிட்டத்தட்ட 80க்கும் அதிகமான டிஷ்சை எங்கள் யுனிக் ஸ்டைலில் கொடுத்துட்டு இருக்கோம். அதோபோல கடைக்கு வரவுங்க வந்ததும் முதல்ல ஆர்டர் செய்றதுன்னா அது பரோட்டாதான். தோசைக் கல்லு மேல ஆவி பறக்க, எண்ணெய்ல உருட்டி வைத்துள்ள பரோட்டா மாவை போட்டு பொரிச்சு எடுப்போம். பொரித்த பரோட்டாவை மீண்டும் பொரித்துக் கொடுப்போம். இதனால், ப்ரோட்டா சும்மா மொறு மொறுவென வரும்.

இந்த பரோட்டாவை இலையில் பிய்த்து போட்டு அதோடு சால்னாவையோ, பாயோவையோ சேர்த்து வைத்து சாப்பிடும்போது அதன் சுவையே அல்டிமேட்டாக இருக்கும். சால்னாவில் சிக்கன், மட்டன் என ரெண்டும் இருக்கு. சைவ பிரியர்களுக்காக வெஜ் குருமாவும் கொடுத்துட்டு இருக்கோம்.இதோட பிரியாணி, சைனிஸ் ஸ்டைல் ஃபிரைடு ரைஸ் தருகிறோம். சைவம் சாப்பிடுறவங்களுக்கு பனீர், காளான், கோபி என்று கொடுக்கிறோம். பொதுவாகவே உணவகத்திற்கு வருபவர்கள் மெயின் டிஷ் சாப்பிடுவதற்கு முன்னாடி ஸ்டார்டர்ஸ் என்ன இருக்குன்னு கேட்பாங்க. அவுங்களுக்காக பெப்பர் பார்பிக்யூ, தந்தூரி, பிச்சி போட்ட நாட்டுக்கோழி பிரை, மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன் ரோஸ்ட்ன்னு கொடுத்துட்டு வரோம். வெஜ்ஜில ஆச்சாரி பன்னீர் கிரில், ஆலூ டிக்கா தபாவாலாவும் கொடுக்கிறோம்.

உணவகத்திற்கு தொடர் வாடிக்கையாளர்கள் வருவதற்கு முக்கிய காரணம் சுவைக்கு நாங்கள் சேர்க்கும் மசாலாவும், பிரெஷ்ஷாக தினம் தினம் வாங்கும் இறைச்சியும், காளான், பன்னீரும்தான்.ஒரு உணவைத் தயார் செய்யும் போது அனைத்து வகையான சமையல் முறைகளும் ஒன்றாக இருக்காது. சில உணவுக்கு காரம் தூக்கலா இருக்கணும், தென்னியந்திய உணவுகளுக்கு பெப்பர் தூக்கலாக இருக்கணும். இப்படி ஏகப்பட்டது இருக்கு. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவு குறித்தோ, அதன் தயாரிப்புப் பொருட்கள், தயாரிக்கும் விதம் குறித்தோ ஏதேனும் தெரியவேண்டுமெனில் தயங்காமல் கேட்டு தெரிந்து சாப்பிடுகின்றனர். அப்படித்தான் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துவருகிறோம். தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் வரத்தொடங்கியுள்ளனர். அதனால் அனைத்து உணவுகளையும் எங்களால் செய்ய முடியவில்லை. ஆகவே, அனுபவம் உள்ள சமையல்காரர்களை பணி அமர்த்தி உள்ளோம்.

எந்த அளவிற்கு உணவகத்திற்கு வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு செல்கிறார்களோ அதே அளவிற்கு ஆன்லைன் மூலமாகவும் உணவுகளை டெலிவரி செய்து வருகிறோம். உணவகத்தை நான், அண்ணா, அம்மா, அண்ணின்னு எல்லாரும் குடும்பமாகத்தான் பார்த்து வருகிறோம். இவுங்க எல்லாரோட உழைப்பும் இன்றைக்கு என்னையும், அண்ணனையும் முதலாளியா மாத்தி இருக்கு. உணவகம் தொடங்கலாம்னு வீட்டில் சொன்னதும் எல்லாரும் எங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. நீ என்ன வேணும்னாலும் பண்ணு, நாங்க உனக்கு துணை இருக்கோம்னு சொன்னாங்க. அந்த நம்பிக்கையிலதான் உணவகத்தைத் தொடங்கினேன். இப்ப நல்ல சக்சஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கு.

அந்த வார்த்தைதான் இன்னைக்கு மூன் பவ் கேஃபே அண்ட் ரேஜ் ரூம் உணவகத்தினை திறக்க நம்பிக்கைய கொடுத்துச்சு. எங்கள் உணவகத்தில் தயார் செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் நாங்களே தயார் செய்த மசாலாவை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர் என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இதில் எங்கள் உணவின் ருசி பிடிச்சவுங்க, கேம் பிடிச்சவுங்க நிறைய பேரு சனி, ஞாயிறுல குடும்பத்தோடயும் வந்து சாப்பிட்டு போறாங்க. நான் ரொம்ப நாள் பட்ட கஷ்டத்துக்கு இன்னைக்கு பலன் கிடைச்சிருக்கு. இப்போ எங்களுக்கான அடையாளத்தை நாங்களே உருவாக்கி இருக்கிறோம்’’ என கூறி முடித்தார்.

– சுரேந்திரன்

காளான் டிக்கா

தேவையான பொருட்கள்

காளான் – 1 பாக்கெட்
கெட்டித்தயிர் – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு – 1/2
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை

ஒரு பவுலில் தயிர் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்து வைத்த இந்த கலவையில் கழுவி வைத்த முழு காளான் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய காளானை டிக்கா குச்சியில் முதலில் குடைமிளகாய், பிறகு வெங்காயம், அதன் பிறகு காளான் என அடுக்கடுக்காக அடுக்கிக் கொள்ளவும். பிறகு இதனை 10 நிமிடம் அப்படியே வைக்கவும். தோசைக்கல்லை சூடு செய்து, அதில் சிறிது எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் காளான்களை சேர்த்து ஒவ்வொரு மூன்று நொடிக்கு ஒரு தடவை திருப்பி போட்டு, 15 நிமிடம் மசாலா வற்றி காளான் வெந்தவுடன் எடுத்தால் சுவையான காளான் டிக்கா தயார்.

The post கேம்களுடன் சூப்பர் ரெஸ்டாரெண்ட் appeared first on Dinakaran.

Tags : Super Restaurant ,Peru ,Chennai ,Mumbai ,Bangalore ,Lake Weu Restaurant ,Rupetop Restaurant ,Restaurant ,
× RELATED பெருவில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5...