திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எண்ணும் பணி நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை எண்ணிக்கை முடிவில், உண்டியலில் ரூ.1.55 கோடி ரொக்கப் பணம் காணிக்கையாக வசூலாகியிருப்பது தெரியவந்தது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக, திருத்தணி முருகன் கோயில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது.
இக்கோயிலுடன் சுமார் 26 உபகோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் கடந்த 31 நாட்களில் வசூலான உண்டியல் காணிக்கை மற்றும் திருப்பணி காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக மலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இப்பணியை கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பை சேர்ந்த பக்தர்கள் மூலம் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் தரன், அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, மு.நாகன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இந்நிலையில், நேற்று மாலை திருத்தணி மலைக்கோயில் வளாகத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு பெற்றது. இதில், கடந்த 31 நாட்களில் ரூ.1 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 41 ரூபாய் ரொக்கம், 960 கிராம் தங்கம்ட, 11 கிலோ 100 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது.
மேலும், திருப்பணி காணிக்கையாக ரூ.5 லட்சத்து 29 ஆயிரத்து 665 ரூபாயை பக்தர்கள் வழங்கியுள்ளனர். இதில் பணம் அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. தங்கம், வெள்ளி பொருட்கள் கோயில் பாதுகாப்பு பெட்டக்கத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது என கோயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.55 கோடி காணிக்கை appeared first on Dinakaran.