×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நவம்பர் மாதம் கைத்தறி கண்காட்சி: திமுக நெசவாளர் அணி அறிவிப்பு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை உள்ளிட்ட 5 மண்டலங்களில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என திமுக நெசவாளர் அணி அறிவித்துள்ளது. சென்னை தியாகராய நகரில் திமுக நெசவாளர் அணியின் மாவட்ட, மாநகர, மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கும்பகோணம் ஆகிய ஐந்து மண்டலங்களிலும் நெசவாளர்களின் கைவண்ணத்தில் நெசவு செய்த பொருட்களை வைத்து கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவது என்றும், பருத்தி துணி பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பருத்தி நூலில் நெசவு செய்யப்பட்ட பைகளில் கலைஞர் நூற்றாண்டு இலட்சினை பொருத்தி வழங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது:நெசவாளர்களுக்கு தேவையான அனைத்தையும் முதல்வர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 18 நூற்பாலைகள் இருந்தது. ஆனால் இதில் 12 நூற்பாலைகள் மூடப்பட்டு விட்டது. தற்போது 6 நூற்பாலைகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் அதனை ஆபத்தில் இருந்து மீட்டவர் முதல்வர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நூற்பாலை தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் வைப்புநிதி வழங்கப்படவில்லை. இதனை அறிந்த முதல்வர் தொழிலாளர் வைப்பு நிதியாக ரூ.4.14 கோடி வழங்கியுள்ளார். மேலும் கைத்தறி மற்றும் துணி நூல்துறை சார்பில் புதிய துணிநூல் கொள்கையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நவம்பர் மாதம் கைத்தறி கண்காட்சி: திமுக நெசவாளர் அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK weavers ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…