×

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது செப்.20-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!

சென்னை: செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையினர் கைது செய்ததும் நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,

செந்தில் பாலாஜி தரப்பு கபில் சிபல் வாதம்:

செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பானது என செந்தில் பாலாஜி தரப்பு கபில் சிபல் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை. வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.

பாஜகவில் இணையுமாறு இ.டி. கேட்டுள்ளது-கபில் சிபல்

நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என்று விசாரணையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. ஒருவர் மீது வழக்குப்பதிந்த பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா என விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் உள்ள நிலையில் என்னால் சாட்சிகளை கலைக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக தாம் இருக்கும் நிலையில் எங்கும் தப்பிச் செல்ல இயலாது என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்தது.

மேலும் செந்தில் பாலாஜி தற்போது இருக்கும் உடல்நிலையின்படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்வார். 3,000 கோடி, 20,000 கோடி ஊ டழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கணினியில் வைக்கப்பட்டுள்ளதால் கலைக்க முடியாது என கபில் சிபல் கூறினார்.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு-என்.ஆர்.இளங்கோ வாதம்

செந்தில் பாலாஜி மீது கூறப்படும் முறைகேடு அவர் அதிமுகவில் இருந்தபோது நடைபெற்றது என என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். ஆனால் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்த பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை 6 நாட்கள் சட்டவிரோதமாக இ.டி. தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. செந்தில் பாலாஜி குற்றம் செய்தாரா? இல்லையா என விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்; எனவே ஜாமின் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி எங்கும் தப்பி செல்லமாட்டார், வேண்டுமென்றால் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கிறோம் என என்ஆர் இளங்கோ வாதிட்டார்.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு-அமலாக்கத்துறை வாதம்

புதிய ஆவணங்களை தற்போது தாக்கல் செய்துள்ளதால் எங்களது தரப்பு வாதத்தை செவ்வாய் தொடங்கலாமா? என அமலாக்கத்துறை தெரிவித்தது. அமலாக்கத்துறை சார்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் வாதம் செய்தார். சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. முறைகேடு இடத்தரகர்கள் மூலம் நடந்துள்ளது; பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது; சிலருக்கு கிடைக்கவில்லை.

வருமானவரி கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டதாலேயே அது சட்டப்பூர்வமான பணம் ஆகாது என்று கூறப்பட்டது. வருமான வரிகணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை -என்றில்லை; விசாரணையில்தான் அது தெரியவரும். குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்தான், குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி தவறு செய்யவில்லை என நிரூபிக்க முடியாது. அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமின் கோர முடியாது. ஐ.பி.சி. வழக்குகளுக்கு வேண்டுமானால் அது பொருந்தும்; அமலாக்கத்துறை சட்டம் என்பது வேறு என அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது.

செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார்; சக்தி வாய்ந்த நபராக இருக்கிறார், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமின் கோருவதற்கு உடல்நிலை ஒரு காரணம் அல்ல; ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை வாதம் செய்தது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் உள்ளனர். செந்தில் பாலாஜியின் எலக்ட்ரானிக் பொருட்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக கூறுவது தவறு. ஆவணங்களை சேகரிக்கும் நோக்கிலேயே எலக்ட்ரானிக் பொருட்கள் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டன. செந்தில் பாலாஜியின் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டது.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு – செப்.20-ல் தீர்ப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.

The post செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது செப்.20-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Primary Session Court ,Senthil Balaji Jamin ,Chennai ,Senthil Balaji ,Jamin ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...