×

பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத் திட்டம்.. உரிமைத் தொகை வழங்கும் வரை ஸ்டாலின் ஆட்சியே : முதல்வர் சிறப்புரை

சென்னை: வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கீகரிக்கும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கையேடு வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் அடையாளமாக சில பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எனது அரசியல் பயணத்திற்கான உந்துசக்திகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல் இருப்பது தான் காஞ்சி மாநகரம்.18 வயதில் அண்ணா சுடரை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு வந்தேன்.தமிழ் சமுதாயத்தை காக்கக்கூடிய திராவிட சுடரை ஏந்தி தற்போது காஞ்சிபுரம் வந்து இருக்கிறேன். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தது வாழ்நாளில் மிகப்பெரிய பேராக கருதுகிறேன்.

தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை அண்ணாதுரை தான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று அண்ணா கூறினார். இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை திமுக ஆட்சி செயல்படுத்தி உள்ளது. சுருக்கு பையில் பணம் இருந்தால் நிமிர்ந்து நடப்பேன் என்று ஒரு பெண்மணி என்னிடம் கூறினார்.இதைவிட இந்த திட்டத்திற்கு வேறு என்ன பெருமை வேண்டும். எந்த நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறிய மகிழ்ச்சி கிடைத்துள்ளது.அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றி காட்டுவோம் என நிரூபித்துள்ளோம். கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் காலம் வரை ஸ்டாலின் ஆட்சி இருப்பதாக அர்த்தம்.மகளிர் உரிமை திட்டம் 2 முக்கிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. பிரதிபலன் பாராமல் வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்பிற்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. ஆண்டுக்கு ரூ.12,000 என்பது பெண்களின் வாழ்வாதாரத்திற்கே உறுதுணையாக இருக்கும்.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பெண்களை அடக்கி வைத்திருந்தார்கள்.குழந்தை திருமணங்களை இன்றும் ஆதரித்து பேசும் பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள்.பெண்கள் படிக்க முடியாது. வேலைக்கு செல்ல முடியாது என்ற சூழலை மாற்றியுள்ளோம்.மதத்தின் பெயராலும் பழமையின் பெயராலும் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டு இருந்தனர்.உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் இந்த பிற்போக்கு தனங்களில் முடக்கப்பட்டு இருந்தனர்.சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்பதால் திராவிட இயக்கம் மீது சிலருக்கு கோபம்.பெண்களை அடக்கி ஒடுக்குவதை எதிர்க்கிறோம் என்பதால் திமுகவை கண்டு சிலருக்கு எரிச்சல். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை நிரூபித்து காட்டியதுதான் திராவிட மாடல் ஆட்சி.பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிட மாடல்.பெண்கள் ஒவ்வொரு நாளும் உழைக்கும் நேரத்தை கணக்கு பார்த்து ஊதியம் கொடுத்தால் எவ்வளவு ஊதியம் கொடுக்க முடியும். ஆனால் அவுஸ் ஒய்ப் என்ற சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள்.பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத் திட்டம்,”என்று பேசினார்.

The post பெண்கள் சுயமரியாதையுடன் வாழவே மகளிர் உரிமைத் திட்டம்.. உரிமைத் தொகை வழங்கும் வரை ஸ்டாலின் ஆட்சியே : முதல்வர் சிறப்புரை appeared first on Dinakaran.

Tags : Stalin ,Chief Minister ,Chennai ,CM ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...