×

நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் விநியோகம் குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சலுக்கு தனி வார்டு

நாகர்கோவில், செப்.15: ஆசாரிபள்ளத்தில் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகின்ற நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலும் மாவட்டத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் ‘நிபா’ காய்ச்சல் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவையொட்டிய குமரி மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு டெங்கு காய்ச்சலுக்கு கொசுவலைகள் மூடப்பட்ட வகையில் 12 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் மட்டும் இங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ‘நிபா’ வைரஸ் பரவலை தடுக்க கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் ஐந்து வழித்தடங்களில் சுகாதார சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் ‘நிபா’வுக்கு தனி வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை காய்ச்சல் பாதிப்புக்காக கேரளாவில் இருந்து யாரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. காய்ச்சல் பாதிப்புகளுடன் வருகின்ற நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயஸ் தலைமையில் மருத்துவ அதிகாரிகள் காய்ச்சல் பாதிப்பு முன்னேற்பாடு பணிகளை நேற்று ஆய்வு செய்தனர். ஆர்.எம்.ஓ.,கள் ஜோசப் சென், விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ் கூறியதாவது: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் வார்டு தனியாக ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வார்டில் டெங்கு காய்ச்சல், சீரியஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஐசியு போன்ற வசதியுடன் ஆறு படுக்கை வசதிகள், டெங்கு காய்ச்சலுக்கு 12 படுக்கைகள் கொசுவலை போடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அதிக அளவில் மாவட்டத்தில் இல்லை. தற்போது 2 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் ஜனவரி மாதம் முதல் மொத்தம் பெரியவர்கள் 410 பேர் காய்ச்சலுக்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 75 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஆவர். இந்த மாதம் மட்டும் காய்ச்சலுக்கு உள்நோயாளியாக இதுவரை 33 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தாக்கினால் அவர்களை ‘கோவிட்’ போன்று தனிமைப்படுத்திதான் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்காக பழைய கோவிட் வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 8 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 படுக்கைகள் ஆண்களுக்கும், 4 படுக்கைகள் பெண்களுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 ஐசியு படுக்கை, 2 பீடியாட்ரிக் படுக்கை ஆகும். இங்கு பணியாற்றுகின்றவர்களுக்கு கவச உடை, முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் வார்டில் பணியாற்றுகின்றவர்களும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘நிபா’வால் சுய நினைவு பாதிக்கும்
இது தொடர்பாக டீன் பிரின்ஸ் பயஸ் மேலும் கூறுகையில், ‘ நிபா காய்ச்சல் அறிகுறி என்பது எல்லா காய்ச்சல்களையும் போன்று தலைவலி, கண் எரிச்சல், இருமல், சளி, கை, கால் வலி போன்றவைதான் இருக்கும். ஆனால் இந்த அறிகுறிகளுடன் நோயாளிகள் கேரளாவில் இருந்து வந்தால் அவர்களை தனியாக சிகிச்சை அளித்து கவனிக்கப்படும். இவர்களுக்கு நிபா வைஸ் பாதிப்பு இருந்தால் நுரையீரல், மூளை பாதிப்பு ஏற்படும். மூளை காய்ச்சல் போன்று ஏற்படும். அவர்கள் சுயநினைவு பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பர். அந்த மாதிரி யாராவது இருந்தால் அவர்களை தனிமைப்படுத்திவிடுவோம். காய்ச்சல் வார்டுகளில் இருப்பவர்கள் அனைவருமே முக கவசம் அணிய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளோம்.

The post நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் விநியோகம் குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சலுக்கு தனி வார்டு appeared first on Dinakaran.

Tags : Kumari Government Medical College ,Nagercoil ,Kumari Government Medical College Hospital ,Asaripallam ,
× RELATED குமரியில் வண்ண, வண்ண ஸ்டார்கள்...