
பெரம்பலூர்,செப்.15: பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கைம்பெண்கள், ஆதரவற்ற கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அரசு இ-சேவை மையங்கள் மூலம் இணையதள வழியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வருமானச் சான்று (வருட வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல்), வயது வரம்பு 20-40க்குள் (கல்விச்சான்று அல்லது பிறப்பு சான்று), விதவையாக இருந்தால் விதவைச் சான்று, கணவரால் கைவிடப்பட்டவராக இருந்தால் அதற்கான சான்று, தையல் பயிற்சி சான்று (குறைந்தது 6மாத கால பயிற்சி முடித்திருக்க வேண்டும்), பாஸ்போர்ட் அளவு புகைப் படம் -2, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்பஅட்டை ஆகிய அனைத்து சான்று களுடன் அரசு இ-சேவை மையங்களில், இணைய தள வழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.