×

உத்திரமேரூர் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் க.சுந்தர் எம்எல்ஏ

சென்னை: இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறு கொண்ட தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக விளங்கும் சங்க கால இலக்கிய சான்றுகள் நிறைந்த தொன்மை நகரம் காஞ்சிபுரம். உலகே வியக்கும் உன்னத பட்டுகளை தயாரித்து கொடுக்கும் நெசவு நகரம். கட்டிடக்கலைக்கு பெயர் போன பல்லவர்களின் தலைநகரம். காஞ்சி கல்வியில் கரையில்லாத காஞ்சி என திருநாவுக்கரசராலும், நகரங்களில் சிறந்தது காஞ்சி என காளிதாசராலும் புகழப்பட்ட நகரம் காஞ்சிபுரம். சைவம், வைணவம், பவுத்தம், சமணம் என அனைத்து மதத்தினரும் காண விரும்பும் ஆயிரம் கோயில்களின் அழகிய நகரம். பவுத்தம் தழைத்த பழந்தமிழகத்தில் பல்கலைக்கழகம் அமைந்திருந்த கலைகள் மிகுந்த அறிவு தலைநகரம். சீனப் பயணிகளான யுவான் சுவாங், பாஹியான் ஆகியோர் வருகை தந்து மாணவர்களாக இருந்து பவுத்தம் பயின்றதும் இதே காஞ்சியில் இருந்து தான்.

ஓடைகள், ஆறுகள், குளங்கள் என வளமும், எழிலும் பொருந்திய நீர்வளம் மிகுந்த ஏரிகள் மாவட்டம். அனைத்துக்கும் மேலாக சாமானியர்களாலும் சரித்திரத்தை திருத்தி எழுத முடியும் என நிரூபித்து, தமிழகம் இன்றளவும் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் தனித்துவத்தோடு மிளிர்வதற்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணும் காஞ்சிபுரம் தான். இத்தனை பெருமைகளை கொண்டு திமுகவின் தலைநகராக விளங்கும் காஞ்சிபுரத்தில் மக்களுக்கு ஏற்ற வகையில் தங்கு தடை இன்றி உறுதுணையாக இருக்க காஞ்சிபுரத்தை கட்சி ரீதியாக வடக்கு மற்றும் தெற்கு என்று இரண்டு மாவட்ட பகுதியாக பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் நான்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரத்தின் தெற்கு மாவட்டத்தின் செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் க.சுந்தர் எம்எல்ஏ.

உலக அளவில் வெளிப்படையான தேர்தல்கள் மூலம் ஜனநாயகத்தை உயிர்போடு வைத்திருக்கும் இந்திய உபகண்டத்தில் கி.பி. 8 நூற்றாண்டிலேயே அரசு நிர்வாக சபைக்கு மக்களிலிருந்து பிரதிநிதிகள் குடவோலை முறையின் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதற்கான விதிமுறைகளை வகுத்து அளித்த முதலாம் பராந்தக சோழரின் கல்வெட்டுகளை உள்ளடக்கி தாங்கி நிற்கிறது உத்திரமேரூர். இப்படி ஏராளமான வரலாறு தகவல்களை தன்னுள்ளடக்கிய உத்திரமேரூர் தொகுதியில் 5 வது முறையாக மக்களின் பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து கொண்டிருக்கிறார் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ.பேரறிஞர் அண்ணா, கலைஞர் முன்னின்று நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பள்ளி பருவத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டார் க.சுந்தர்.சென்னை பச்சையப்பா கல்லூரியில் பயின்றபோது திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயல்பட்டார்.

1967ம் ஆண்டிலிருந்தே திமுகவுக்காக தேர்தல் களத்தில் பணியாற்ற தொடங்கினார். 1980ம் ஆண்டு கிளை பொருளாளராகவும், 1987ம் ஆண்டு ஒன்றிய செயலாளராகவும், 1996ம் ஆண்டு மாவட்ட துணைச் செயலாளராகவும், 2000ம் ஆண்டு மாவட்ட அவை தலைவராகவும் என படிப்படியாக கட்சிப் பொறுப்புகளில் முன்னேறி தனது திறன்மிக்க செயல்பாடுகளுக்கு அங்கீகாரமாய் கடந்த 2014ம் ஆண்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1986ம் ஆண்டு சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக பணியை தொடங்கிய இவர் 1989ம் ஆண்டு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றார். கட்சியில் உறுப்பினரான காலம் தொட்டே தொகுதியின் தேவைகளையும் அங்கு வாழும் மக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்ந்து திமுகவோடு இணைந்து பணியாற்றி வந்தார்.

அதன் விளைவாகவே விவசாயத்தை மட்டும் பெருவாரியாக நம்பியிருந்த உத்திரமேரூரில் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார். சொல்லிற்கும், செயலிற்கும் வித்தியாசம் காட்டாமல் ஏழை, எளிய மக்களோடு நெருங்கி பழகி வரும் க.சுந்தர் எம்எல்ஏ அடிப்படையில் விவசாய குடும்பத்தை சார்ந்தவர். அதனால் இயல்பிலேயே விவசாயிகளின் நலனின் அக்கறை காட்டி வருகிறார்.உத்திரமேரூர் பகுதியில் விவசாயத்திற்கு பாசன வசதி மேம்படுத்தி கொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் க.சுந்தர் எம்எல்ஏ. குறிப்பாக வெங்கச்சேரி அருகே செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து 10க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் பயன்பெறும் வகையில் வழி வகுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறுக்கு அடுத்தபடியாக முக்கிய நீர் ஆதாரமாகவும் பெரும் பரப்பளவு கொண்டதாகவும் விளங்கும் தென்னேரியில் இருக்கும் நீரை 6 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் பயன்படுத்தும் வகையில் திட்டங்களை வழி வகுத்தும், அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இவை மட்டுமின்றி தொகுதியின் அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்பட்டு, அவற்றின் கரைகள் முழுமையான பலத்தோடு இருப்பதை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவற்றை உறுதியாக இருக்கிறதா என்று சோதிக்க இவர் தவறுவதில்லை. இவ்வாறு விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் சட்டமன்றத்திலும் அதிகாரிகளிடமும் எடுத்துக் கூறி நிறைவேற்றியும் தந்து வருகிறார்.

உத்திரமேரூரில் பள்ளி கட்டிடங்கள், கிராமப்புறங்களில் சிமென்ட் சாலை அமைத்தல், சமுதாய நலக் கூடங்கள் அமைத்தல், கிராமப்புற பகுதிகளில் பொது சுகாதார கழிப்பிடம் அமைத்தல் என அனைத்து கிராமங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் பேருந்து நிலைய வசதிகள், பேருந்து நிலைய கட்டிடங்கள், அது மட்டுமல்லாமல் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் திருமுக்கூடல்-பெருநகர் மேம்பாலம், கிளை நூலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தியது இவரது எண்ணற்ற சாதனைகளில் குறிப்பிடத்தக்கது. உத்திரமேரூரில் நீதிமன்றம், இளைஞர்கள் பயன் பெறும் வகையில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்துத் தந்தது என பல அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

காலத்துக்கேற்ப திமுகவின் அணுகுமுறைகளில் மாறுதல் ஏற்பட்டாலும் உரிமைக்காக உறுதியாக போராடும் குணத்திலிருந்து என்றுமே விலகியது இல்லை. அதே வழியில் கொள்கை வளம் மிக்க தொண்டர் படை, தெளிவான செயல்திட்டம் மூலம் சுறுசுறுப்பாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக செயல்பட்டு வருகிறார் க.சுந்தர் எம்எல்ஏ. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ரயில் மறியல், சிறை நிரப்புதல் என தலைமை அறிவிக்கும் அனைத்து போராட்டங்களையும் எழுச்சியோடு நடத்தியுள்ளார்.

தோற்றத்தில் எளிமை, லட்சியத்தில் உறுதி, செயல்பாட்டில் தெளிவு, திட்டமிடுவதில் துல்லியம் என செயல்பட்டு வரும் க.சுந்தர் எம்எல்ஏ, கடந்த 2016 சட்டமன்ற பொது தேர்தலில் தனது மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக நின்றார். 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பல லட்சம் ஓட்டுகளில் திமுக வேட்பாளர் வெற்றி பெற பாடுபட்டார்.பேரறிஞர் அண்ணாவின் அன்றைய திராவிட நாடு பத்திரிகையின் அலுவலகம் தான் தற்பொழுது கலைஞர் பவள விழா மாளிகை என்ற பெயரிலான காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகம். அங்கிருந்து அண்ணாவின் கனிவு கலைஞரின் துணிவு முதல்வரின் உழைப்பை பின்பற்றி சுறுசுறுப்பாக இயங்குகிறார் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

The post உத்திரமேரூர் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் க.சுந்தர் எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : Uttramerur ,Sunderar MLA ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...