×

சென்னை-பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை இடையே குண்டும், குழியுமாய் காணப்படும் சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம் மற்றும் ஊத்துக்கோட்டை வரை உள்ள சுமார் 36 கி.மீ சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், கர்னூல் ஆகிய பகுதிகளுக்கும், இதேபோல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் கார், பஸ், வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கடந்த 2021ம் வருடம் ஜனப்பன் சத்திரம் முதல் புதிதாக சாலை போடப்பட்டது.

ஆனால் இந்த சாலையில் ஒரு நாளைக்கு 100கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்றதால் 2 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ஒட்டு (பேட்ஜ் ஓர்க்) சாலையும், கன்னிகைப்பேர், வடமதுரை கூட்டுசாலை, ஆத்துப்பாக்கம், தண்டலம், பாலவாக்கம் போன்ற பகுதிகள் என ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. இதனால் சாலை விரிசல் ஏற்பட்டு பெயர்ந்துள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, ஜனப்பன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. இது சென்னை- திருப்பதியின் முக்கிய நெடுஞ்சாலையாகும். இரவு நேரத்தில் பைக்கில் வருபவர்கள் சாலைப்பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகிறார்கள். இதில் ஒருசிலர் இறந்தும் போய் விடுகிறார்கள். மேலும் கடந்த சில மாதங்களாக சாலை ஓரத்தில் பூமிக்கு அடியில் காஸ் பைப் புதைக்கும் பணிகள் நடைபெற்றது. அந்த பணி முடிந்ததும் அந்த பைப் புதைத்த பள்ளத்தை கூட மூடவில்லை. இதில் இரவில் வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை பள்ளத்தையும், கேஸ் பைப் புதைத்த குழியையும் மூட வேண்டும். என கூறினர்.

The post சென்னை-பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை இடையே குண்டும், குழியுமாய் காணப்படும் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Periyapalayam ,Uthukottai ,Oothukottai ,Chennai – ,Tirupati ,Janappan Chatram Junction ,
× RELATED பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு...