×

சிங்கப்பூர் அதிபராக தமிழர் தர்மன் பதவியேற்றார்: சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 9வது அதிபராக தமிழர் தர்மன் சண்முகரத்தினம் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளுங்கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட தர்மன் சண்முகரத்தினம் (66) 70.4 சதவீத வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சீன வம்சாவளிகளான நிக் காக் சாங் 15.72 சதவீத வாக்குகள், டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றனர்.

மகத்தான வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் 9வது அதிபராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான இஸ்தானாவில் நடந்த விழாவில், இந்திய வம்சாவளி தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தர்மன் அதிபராக அடுத்த 6 ஆண்டுகள் பதவி வகிப்பார். முன்னதாக சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரான ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

புதிய அதிபராக பதவியேற்ற பின் உரையாற்றிய தர்மன் சண்முகரத்தினம், ‘‘மக்கள் எனக்கு அளித்துள்ள வலுவான ஆதரவை பயன்படுத்தி சிங்கப்பூரின் பல இனத்தன்மையை பலப்படுத்துவேன். அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக சாதனைகள் படைக்க உதவுவேன்’’ என உறுதி அளித்தார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரில் பிறந்தவர். பொருளாதார நிபுணரான இவர் சிங்கப்பூர் துணை பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும், சர்வதேச நிதியம், உலக பொருளாதார மன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார். இவர், ஜப்பான்-சீன பெற்றோருக்கு பிறந்த சிங்கப்பூர் வழக்கறிஞர் ஜேன் இட்டோகியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனர். அதிபராக பதவியேற்ற தர்மன் சண்முகரத்தினத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூர் அதிபராக பதவியேற்கும் 3வது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிங்கப்பூர் அதிபராக தமிழர் தர்மன் பதவியேற்றார்: சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : President ,Chinese President Xi Jinping ,Singapore ,Shanmugaratnam ,9th President of Singapore ,President Xi Jinping ,Dharman ,
× RELATED சிங்கப்பூர் சிநேகிதி