
பல்லாவரம்: குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியை சேர்ந்தவர் முருகன் (41), கார் டிரைவர். இவருக்கு, கலாவதி (35) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். கடந்த வாரம் மகளின் பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த கலாவதி, வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து வீசியதில், முருகனின் காலில் பட்டு ரத்தம் வடிந்ததுள்ளது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமரன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குன்றத்தூர் போலீசார், முருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, முருகன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது, முருகன் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் ேபாலீசார், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், கலாவதியை கைது செய்து விசாரித்து வருவதாகவும், விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து, முருகனின் உடலை எடுத்துச்சென்று அவரது உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்தனர். மேலும், கலாவதி வெட்டியதால் முருகன் இறக்கவில்லை என்றும், அவர் இறப்பிற்கான உண்மையான காரணம் என்னவென்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும், கலாவதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பிறந்த நாள் விழாவில் தகராறு; கணவனை வெட்டிய மனைவி கைது: தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகார் appeared first on Dinakaran.