×

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு

சென்னை: பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, மாணவர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி மேயர் பிரியா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினால் 2021ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி மஞ்சப்பை வழங்கும் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர சமுதாய நல அமைப்புகள் ஒத்துழைப்புடன் இலவச மஞ்சப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், ‘மீண்டும் மஞ்சப்பை’ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாதவரம் மண்டலம், வார்டு-23க்குட்பட்ட புழல், காந்தி பிரதான சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மேயர் பிரியா தலைமை வகித்து, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த வண்ண படங்களுடன் கூடிய ஒட்டும் விழிப்புணர்வு பிரசுரங்களை மேயர் பிரியா வெளியிட்டு ஆசிரியர்களிடம் வழங்கினார்.

அப்போது, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்குகள், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், நிலைக் குழுத் தலைவர் சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் நந்தகோபால், கவுன்சிலர் ராஜன், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) மகேசன், சுகாதாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayor ,Priya ,TN ,Dinakaran ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...