×

வேங்கைவயல் விவகாரம் ஒருநபர் ஆணையம் இடைக்கால அறிக்கை தாக்கல்

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம், இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சத்யநாராயணன் ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்தார். அதேபோல சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நிலை குறித்த அறிக்கையையும் அவர் தாக்கல் செய்து கூறும்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதுவரை 191 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுகிறது. சந்தேகிக்கும் 25 நபர்களிடம் ஏற்கனவே மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 4 பேரிடம் இரண்டு வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து, நீதிபதி சத்தியநாராயணன் குழு அளித்த அறிக்கையை பிரித்து ஆய்வு செய்த நீதிபதிகள், காவல்துறையின் விசாரணை மந்தகதியில் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அறிக்கையை பாதுகாப்பாக பத்திரப்படுத்தும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் புலன் விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வேங்கைவயல் விவகாரம் ஒருநபர் ஆணையம் இடைக்கால அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sathyanarayanan ,Vengai Valley ,Chennai High Court ,One ,Commission ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...