
சென்னை: பிற மொழிகளை இழிவுபடுத்துவதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரமளிக்கும் ஊடகமாக இந்தி மாறும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், வளமான ஆட்சி மொழியாக இந்தி உருவெடுக்கும்’’ என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது என்று விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது-பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது’’ என்று வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம்தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ்-கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?. நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post பிற மொழிகளை இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக்கொள்ள வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் appeared first on Dinakaran.