×

ஓமனிலிருந்து தங்கம் கடத்தி வருவதாக தகவல் 100க்கும் மேற்பட்ட பயணிகளிடம் சோதனை: சுங்க துறை அதிரடியால் விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: ஓமன் நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலால், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை சுங்கத்துறையினர் பிடித்து வைத்து பல மணி நேரமாக சோதனை செய்தனர். ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 186 பயணிகளுடன் நேற்று காலை 8 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை வெளியில் செல்ல விடாமல், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்குள் நிறுத்தி வைத்தனர்.
அவர்களிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி, அவர்களை ஒவ்வொருவராக தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து, முழுமையாக சோதனைகள் நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை பகல் 1:30 மணிக்கும் மேலாக நீடித்தது.

அவர்களிடமிருந்து பெரும் அளவு தங்கம் எதுவும் கைப்பற்றப்பட்டதாக தகவல் இல்லை. மேலும் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஒரு சிலர் கொண்டு வந்ததாகவும், அதனை சக பயணிகளிடம் கொடுத்து சென்னை வந்ததும் வாங்கி கொள்கிறோம் என கூறியதாக மற்ற பயணிகள் தெரிவித்தனர். இதற்கு விமான நிலைய அதிகாரிகள் சிலர் துணை என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* சுங்க சோதனையில் சிக்கியவர்களுக்கு வாழை இலை விருந்து
சாதாரண பயணிகள் 40 பேரிடம் கடத்தல் குருவிகள், ஐபோன்களை சென்னை விமான நிலையத்துக்கு வெளியே வாங்கிக் கொள்கிறோம் என கூறி கொடுத்திருந்தனர். அதை சுங்க அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த 40க்கும் மேற்பட்ட சாதாரண பயணிகளை, சுங்க அதிகாரிகள் கடுமையாக எச்சரித்து, எழுதி வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பினர்.மேலும் 60 பயணிகள் கடத்தல் விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள். அவர்களிடமிருந்து கடத்தல் தங்கம், ஐபோன்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து, அவர்களுக்கு அபராதங்கள் விதித்துள்ளனர். அபராதம் கட்டாத 60க்கும் மேற்பட்ட கடத்தல் பயணிகளை, சுங்கத்துறை அலுவலகத்தில் பிடித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு மாலை 3 மணியளவில், உணவு பரிமாறப்பட்டது. வீடுகளில் அனைவரையும் அமர வைத்து, வாழை இலை போட்டு உணவு பரிமாறுவது போல், சுங்கத்துறையினர் விருந்து வைத்தனர்.

The post ஓமனிலிருந்து தங்கம் கடத்தி வருவதாக தகவல் 100க்கும் மேற்பட்ட பயணிகளிடம் சோதனை: சுங்க துறை அதிரடியால் விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Oman ,Chennai ,PTI ,Customs Sea ,Dinakaran ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!