×

நகராட்சி, மாநகராட்சிகளில் துப்புரவு அலுவலர் பணியிடங்கள் அதிகரிப்பு: அலுவலர் சங்கத்தினர் நன்றி

பூந்தமல்லி: நகராட்சி, மாநகராட்சிகளில், துப்புரவு அலுவலர் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் மாநில சங்கத்தின் சார்பாக, மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சங்க செயலாளர் செந்தில் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘‘தற்போது புதிய அரசு ஆணை எண் 152, மற்றும் 10ன் படி மாநகராட்சிகளில் 70 துப்புரவு அலுவலர் பணியிடங்களும், நகராட்சிகளில் 76 துப்புரவு அலுவலர் பணியிடங்களும் என்ற வகையில் அதிகரிக்கப்படடுள்ளன.

அதற்காக மாநில சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயம், சில தேர்வு நிலை நகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகளில் ஏற்கனவே நகர் நல அலுவலர் பணியிடங்கள் உள்ள போது, அந்த நகராட்சிகளில் புதியதாக துப்புரவு அலுவலர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஒரே பணியினை கவனிக்க ஒரு நகராட்சியில் நகர் நல அலுவலர் மற்றும் துப்புரவு அலுவலர் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தவிர்க்க, மருத்துவம் சார்ந்த பணிகளை நகர் நல அலுவலருக்கும், இதர பொது சுகாதார பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகளை துப்புரவு அலுவலரும் கண்காணித்திட நகராட்சிப் பணிகளை பிரித்து உத்தரவு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தவிர, தேர்வுநிலை நகராட்சிகளான குன்னூர், பழனி போன்ற நகராட்சிகளில் புதிய அரசு ஆணை எண் 10ன் படி, எம்எச்ஒ (MHO) எனப்படும் நகர்நல அலுவலர் என்னும் பணியிடம் இல்லை. எனினும், அரசு ஆணை அமலுக்கு வந்து 8 மாதங்களாகியும், அந்நகராட்சிகளில் பணிபுரியும் நகர் நல அலுவலர்கள், பொது சுகாதாரத் துறைக்கு திரும்பிடாமல், இன்னமும் இல்லாத பணியிடத்தில் நீடித்துக் கொண்டுள்ளார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், திரவக்கழிவு மேலாண் பணிகளின் முன்னோடி அலுவலராக பொறியாளரை நியமித்திடவும், காலை உணவு திட்டத்தில் துப்புரவு ஆய்வாளர்களை, உணவு தரத்தினை கண்காணிக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நகராட்சி நிர்வாக இயக்குனரின் உத்தரவினை அனைத்து நகராட்சிகளும் கடைப்பிடித்திட உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். காந்தி கிராமிய பல்கலை கழகத்தில் துப்புரவு ஆய்வாளர் பயிற்சி முடித்து வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு பணி கிடைக்க உரிய சட்ட வழி வகைகளை எடுக்கவும் கோர பட்டது. இந்நிகழ்வின் போது கூடுதல் இயக்குனர் விஜயகுமார் உடன் இருந்தார்.

The post நகராட்சி, மாநகராட்சிகளில் துப்புரவு அலுவலர் பணியிடங்கள் அதிகரிப்பு: அலுவலர் சங்கத்தினர் நன்றி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Tamil ,Nadu Municipal Corporation ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு மசூதியில் தங்குமிடம், உணவு