×

புழல் பகுதியில் சர்வீஸ் சாலையில் செல்லாத மாநகர பேருந்துகள்: பயணிகள் கடும் அவதி

புழல்: புழல் ஜிஎன்டி சாலையில், சென்னை நோக்கி செல்லும் வழியில், சர்வீஸ் சாலைக்குள் மாநகர பேருந்துகள் செல்வதில்லை. இதனால் ஜிஎன்டி சாலையில் வெட்டவெளியில் நின்றபடி பேருந்தில் சென்று வருவதற்கு பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். சென்னை புழல் ஜிஎன்டி சாலையில் சைக்கிள் ஷாப், அம்பேத்கர் சிலை, காவாங்கரை, தண்டல்கழனி ஆகிய பகுதிகளில் சென்னை நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் புதிதாக தார்சாலை போடப்பட்டு உள்ளது.

எனினும், அந்த சர்வீஸ் சாலைக்குள் சென்னை நகருக்கு மாநகர பேருந்துகள் செல்வதில்லை. அங்கு பேருந்து நிழற்குடையும் இல்லை. இதனால், சென்னைக்கு செல்லும் அனைத்து பயணிகளும் ஜிஎன்டி சாலையில் வெட்டவெளியில் நின்றபடி, வாகன நெரிசலுக்கு இடையே மாநகர பேருந்தில் ஏறிச் செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. இதில் பலர் வாகனங்களில் மோதி அடிபடுகின்றனர். மேலும் புழல் ஜிஎன்டி சாலையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோர மின்விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இங்கு சாலை நடுவே காத்திருக்கும் பெண்களிடம் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் செயின் பறிப்பு உள்பட பல்வேறு வழிப்பறி கொள்ளைகள் மற்றும் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், செங்குன்றம் முதல் புழல் ஜிஎன்டி சாலையின் சர்வீஸ் சாலையில் சென்னை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் உள்ளே சென்று வருவதற்கும், அங்கு பேருந்து நிழற்குடை மற்றும் சாலையோர மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கும் சென்னை மாநகர போக்குவரத்து, காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,’’ என தெரிவித்துள்ளனர்.

The post புழல் பகுதியில் சர்வீஸ் சாலையில் செல்லாத மாநகர பேருந்துகள்: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Serving Road ,Cyclone ,GNT road ,Chennai ,Servis Road ,GNT ,Dinakaran ,
× RELATED 5ம் தேதி கரையை கடக்கும் நாளை...