×

திருத்தணி அருகே நள்ளிரவு பல்வேறு இடங்களில் போலீஸ்காரர், தனியார் நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி: 4 பேர் பிடிபட்டனர், 2 பேருக்கு வலை

திருத்தணி: திருத்தணி அருகே போலீஸ்காரர் மற்றும் தனியார் கம்பெனி ஊரியர்களிடம் வழிப்பறி நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி காந்தி சாலை தீப்பாத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர்(30). இவர், கடம்பத்தூர் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு கடம்பத்தூரில் இருந்து பேருந்து மூலம், திருத்தணி பைபாஸ் சாலையில் வந்து இறங்கினார். பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் மேல்நிலைப்பள்ளி பகுதியில் வரும்போது சுரேந்தரை அந்த வழியாக பைக்கில் வந்த கும்பல் சுற்றிவளைத்து கத்திமுனையில் மிரட்டியது.

பின்னர், தாங்கள் வைத்திருந்த கத்தியால் சுரேந்தரின் இடது கையை வெட்டிவிட்டு அவரிடம் இருந்து ரூ.15,000 மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதேபோல், திருத்தணி சித்தூர் சாலையில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் தினேஷ்(35). தனியார் நிறுவன ஊழியர். பணியை முடித்துவிட்டு சித்தூர் சாலையில் நடந்து சென்றபோது, அவரையும் தாக்கி அந்த கும்பல் ரூ.300 மற்றும் அவர் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டு ஓடிவிட்டது. இதனை தொடர்ந்து, திருத்தணி கீழ் பஜாரில் வசித்து வருபவர் பழனி(40). இவர் காந்தி சாலையில் நடந்து வரும்போது அவரையும் வழிமறித்து கத்தியால் மார்பில் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ.250 மற்றும் செல்போனையும் பறித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதேபோல், இந்த கும்பல் ஆர்.கே.பேட்டை வங்கனூர் கிராமத்தை சேர்ந்த மெடிக்கல் கடை ஊழியரான வஜ்ரவேல்(40) என்பவர், வேலை முடிந்து சித்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அதே கும்பல் இவரையும் வழிமறித்து அவரிடமிருந்த ரூ.250 மற்றும் செல்போனையும் பறித்துவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, அக்கையா நாயுடு தெருவில் வசித்து வருபவர் ஜாபர் அலி (35) இவரும் இவரது சகோதரரும் சேர்ந்து கறி கடை மற்றும் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகின்றனர். இதில், திருத்தணி நேரு நகரை சேர்ந்தவர் சந்துரு மற்றும் திருத்தணி அடுத்த பூச்சி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சாம் சுந்தர் இவர்கள் இருவரும் சேர்ந்து ஜாபர் அலியை அன்று இரவு கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து, திருத்திணியில் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சிகள் குறித்து திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறனுக்கு தகவல் சென்றது. இதனையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் தலைமையில் தனிப்படை அமைத்து துரித வேகத்தில் ஈடுபட்டனர். இதில், திருத்தணி பேருந்து டெப்போ அருகே பதுங்கி இருந்த சாம் சுந்தர்(23), திருத்தணி நரசிம்ம சுவாமி கோயிலில் வசிக்கும் முருகன் மகன் சதிஷ் குமார்(23), திருத்தணி சேகர் வர்மாவில் வசிக்கும் ராஜேந்தரன் மகன் கிஷேர்(24), திருத்தணி ஜோதி நகரை சேர்ந்த சஞ்சை(24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கத்தி ரூ.15 ஆயிரம், பணம் செல்போன்கள் மற்றும் பைக் ஒன்று பறிமுதல் செய்தனர்.

போலீசார் தரப்பில் கூறும்போது, இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சந்துரு என்பவர் ஜாபர் அலி நடத்தி வந்த சிக்கன் பகோடா கடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய தொழிலாளியை அடித்ததாக தெரிகிறது. இதற்கு ஜாபர் அலி தனது தொழிலாளிக்கு ஆதரவாக சந்துருவை அடித்து விரட்டி உள்ளார். இதனால் 5 ஆண்டுகள் கழித்து நேற்று சந்துருவின் தூண்டுதலின் பேரில் சாம் சுந்தர் ஜாபரின் கடைக்குள் புகுந்து வெட்ட ஓடி வந்துள்ளார். இதனை பார்த்த ஜாபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் என கூறினர். இதில், தலைமறைவாக உள்ள சந்துரு மற்றும் ராஜேந்திர பிரசாட்டை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

The post திருத்தணி அருகே நள்ளிரவு பல்வேறு இடங்களில் போலீஸ்காரர், தனியார் நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி: 4 பேர் பிடிபட்டனர், 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தும் திட்டம்